தோனியின் சிக்ஸர் சாதனை தகர்ப்பு: அசாதாரண சாதனைகளை தன்வசப்படுத்தும் 'ஹிட்மேன்'!

தோனியின் சிக்ஸர் சாதனை தகர்ப்பு: அசாதாரண சாதனைகளை தன்வசப்படுத்தும் 'ஹிட்மேன்'!

ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி 14 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 140 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன்மூலம் சத்தமின்றி பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார் 'ஹிட்மேன்'.
Published on

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி 14 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 140 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். ஒரு நாள் தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு இது 24-ஆவது சதமாகும். 

இந்நிலையில், சத்தமின்றி பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார் 'ஹிட்மேன்' என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரோஹித் ஷர்மா. அவற்றின் விவரம் பின்வருமாறு:

உலகக் கோப்பைத் தொடரில் 3-ஆவது சதமாகும். இதன்மூலம் உலகக் கோப்பையில் அதிக சதங்கள் எடுத்த இந்தியர்கள் வரிசையில் சக துவக்க வீரரான ஷிகர் தவனுடன் 3-ஆம் இடத்தைப் பகிர்ந்துகொண்டார். 
6 சதங்களுடன் சச்சின் முதலிடத்திலும், 4 சதங்களுடன் கங்குலி 2-ஆம் இடத்திலும் உள்ளனர். விராட் கோலி மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் 2 சதங்களுடன் 4-ஆம் இடத்தில் உள்ளனர். 

இதன்மூலம் ஒரே உலகக் கோப்பைத் தொடரில் 2 சதங்கள் எடுத்த 5-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் ரோஹித் ஷர்மா.

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை ஆட்டங்களில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ரோஹித் ஷர்மா 140 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். 2015 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி 107 ரன்களும், 2003 தொடரில் சயீத் அன்வர் 101 ரன்களும் எடுத்துள்ளனர்.

ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 5 அரைசதங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 5-ஆவது வீரராக இணைந்துள்ளார். 95, 56, 122*, 57 மற்றும் 140 - இவை ரோஹித் ஷர்மா கடந்த 5 ஒருநாள் ஆட்டங்களில் எடுத்துள்ள ரன்களாகும். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி மற்றும் அஜிங்க்ய ரஹானே ஆகியோர் இதில் இடம்பிடித்துள்ள முதல் 4 வீரர்கள் ஆவர்.

பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார் ரோஹித் ஷர்மா. முன்னதாக, 2018-ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கடைசியாக மோதிய ஆட்டத்தில் ரோஹித் 111* ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1996 உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர், நவ்ஜோத் சிங் சித்து துவக்க ஜோடி பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பையில் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது ரோஹித் ஷர்மா, ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்து முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. 

ரோஹித் ஷர்மாவின் 140 தான் உலகக் கோப்பை ஆட்டங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேன் எடுக்கும் 2-ஆவது அதிகபட்ச தனிநபர் ரன்களாகும். 2003 உலகக் கோப்பையில் ஆஸி. வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் எடுத்த 143* ரன்கள் தான் இன்றளவும் அதிகமாக உள்ளது. 

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் 3 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்களில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பின்னுக்குத்தள்ளி ரோஹித் ஷர்மா முதலிடம் பிடித்தார்.

ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய பேட்ஸ்மேன்களின் விவரம் பின்வருமாறு:

ரோஹித் ஷர்மா - 358*

மகேந்திர சிங் தோனி - 355*

சச்சின் டெண்டுல்கர் - 264

யுவராஜ் சிங் - 251

சௌரவ் கங்குலி - 247

வீரேந்திர சேவாக் - 243

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு தோனியும், ரோஹித்தும் 355 சிக்ஸர்களுடன் முதலிடத்தைப் பகிர்ந்திருந்தனர். இருவரும் சமகால வீரர்களாக இருப்பதால் இதில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டு வந்தது. இருப்பினும் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், அடுத்த பல ஆண்டுகளுக்கு ரோஹித் இந்தப் பட்டியலில் கோலோச்சுவார் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com