Enable Javscript for better performance
'Strategy Dhoni' had taken a bold move to drop players like Sachin,Ganguly,Dravid, Sehwag and Gambhi- Dinamani

சுடச்சுட

  
  dhoni

  r

  கடந்த 2004-இல் அறிமுகமான மகேந்திர சிங் தோனி (38), இந்திய கிரிக்கெட்டின் அங்கத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார். 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபி உள்ளிட்ட 3 பெரிய போட்டிகளில் பட்டம் வென்ற ஓரே கேப்டன் என்ற சாதனையை படைத்தவர். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை முதலிடத்துக்கு வழிடநடத்திச் சென்றவர். கடந்த சில ஆண்டுகளாக ரன் எடுப்பதில் தோனி தடுமாறி வருகிறார். ஆட்டத்தில் மந்தத்தன்மை வெளிப்பட்டு, முன்பு போல் ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறுவது கண்கூடாகத் தெரிகிறது. ரன்களை சேஸ் செய்வதில் தோனி மிகவும் தடுமாறியது சமீப ஆட்டங்களில் தெளிவாக வெளிப்பட்டது. 

  நடந்து முடிந்த உலகக் கோப்பையில் விளையாடிய இதர பேட்ஸ்மேன்களை விட சுழற்பந்துக்கு எதிரான தோனியின் ஸ்டிரைக் ரேட் மிக மோசமாக அமைந்தது. குறிப்பாக விக்கெட் கீப்பிங்கில் அதிகளவில் ''பைஸ்'' எனப்படும் உதிரி ரன்கள் செல்ல காரணமாக இருந்ததாக புள்ளிவிவரங்கள் வெளியாகின. இதனால் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு தோனி உடனடியாக ஓய்வு பெற வேண்டும், இந்திய அணியில் இருந்து தோனியை நீக்க வேண்டும், அணியை எதிர்காலத்தை நோக்கி பலப்படுத்தும் விதமாக இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கிறது. முன்னாள் வீரர்கள் சிலரும் தோனியின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பலர் குரலெழுப்பி வருகின்றனர். 

  தோனி மிகப்பெரிய வெற்றிகரமான வீரர், அதனால் அவராக விருப்பப்பட்டு ஓய்வு முடிவை அறிவிக்கும் வரை இந்திய அணியில் தொடர வேண்டும் என்று ரசிகர்கள் ஆதரவும் பெருகி வருகிறது. இதனிடையே ஓய்வு பெறுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தோனியும் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

  உலகக் கோப்பைத் தொடரில் தோனியின் பேட்டிங் தொடர்பாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிருப்தி தெரிவித்தார். மேலும் சில மூத்த வீரர்களும் அவரின் ஆட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் தோனியின் உடல்தகுதியிலும் தோய்வு ஏற்பட்டதும் ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பையில் பிரதிபலித்தது. ஒருமுனையில் இளம் வீரர்கள் இருந்தாலும், அவர்களுக்கு சுமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அனைத்து போட்டிகளையும் தானே தன் தோளில் சுமந்து வெற்றிபெற வைக்கும் திட்டமும் கடந்த சில போட்டிகளில் தவிடுபொடியானது.

  4-ஆவது உலகக் கோப்பையில் விளையாடிய தோனிக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டுடன் டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து தோனி ஓய்வு பெற்று விட்டார். கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக திடீரென முடிவெடுத்தவர். அதுபோன்று சர்வதேசப் போட்டிகளில் இருந்து தனது ஓய்வு முடிவையும் தோனி திடீரென அறிவிக்க வாய்ப்புள்ளது.

  இந்நிலையில், கடந்த காலங்களில் இந்திய அணியின் மூத்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி, விவிஎஸ் லஷ்மண், வீரேந்திர சேவாக் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோரை எதிர்காலத் திட்டமிடல் என்ற நிர்பந்தத்தின் அடிப்படையில் மகேந்திர சிங் தோனி, இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கிய சம்பவங்களையும் கிரிக்கெட் ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

  சிறப்பான ஆட்டத்திறனை பெற்றிருந்த கங்குலி, டிராவிட் ஆகியோரை 2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின்போது உடல்தகுதி மற்றும் ஃபீல்டிங் செய்வதில் மெத்தனமாக செயல்படுவதாக காரணம் காட்டி அப்போதைய கேப்டனாக இருந்த தோனி அவர்களை அணியில் இருந்து நீக்கியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்த லஷ்மண், ஒரே தொடரில் சரியாக விளையாடாத காரணத்தால் ஒரேயடியாக புறக்கணிக்கப்பட்டார். இது அவரின் ஓய்வு முடிவின் போது பிரதிபலித்தது.

  நல்ல ஆட்டத்திறனுடன் இருந்தபோதே கிரிக்கெட்டில் இருந்து கங்குலி விலகினார். இதேபோன்று ராகுல் டிராவிட்டும் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். சச்சினின் ஆளுமை மிகப்பெரியதாக இருந்ததால் மட்டுமே அவர் மேலும் சிலகாலம் கிரிக்கெட் விளையாட முக்கிய காரணமாக அமைந்தது.

  2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிபி சீரிஸின்போது சச்சின், சேவாக், கம்பீர் என மூவரும் இடம்பிடித்திருக்க, யாரேனும் இருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க முடியும் என்று தோனி திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். ''2015-ல் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு அணியை தயார்படுத்தும் விதமாக இளைய வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்குவதாகக் கூறி எங்களை அணியில் இருந்து நீக்கினார். அவர் கேப்டன் என்பதால் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம்'' என்று சேவாக் பின்னாளில் தனது கருத்தை பதிவு செய்தார்.

  அதுபோன்று ''2012-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின்போதே 2015 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்கிறேன். எனவே நீங்கள் மூவரும் (சச்சின், சேவாக், கம்பீர்) இந்திய அணியில் இடம்பெற முடியாது என்றார். 2015 உலகக் கோப்பையில் இடம்பெற வாய்ப்பில்லை என்று 2012-லேயே எந்தவொரு கேப்டனும் இதுவரை கூறியதாக நான் அறிந்திருக்கவில்லை. இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது'' என்று கௌதம் கம்பீர் சமீபத்தில் சாடியிருந்தார். 

  வயது, உடல்தகுதி, ஆட்டத்திறன் தொய்வு, ரன்குவிக்க தடுமாற்றம், மேலும் அணியின் கட்டமைப்பு, எதிர்காலத் திட்டமிடல் என்று தோனியால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து பிம்பங்களும் தற்போது அவருக்கே இறுதிகாலத்தில் ''பூமராங்'' போன்று திரும்பியுள்ளது.

  இந்நிலையில், ராணுவ பயிற்சி செய்கிறேன் விடுப்பு வேண்டும் என்று தனக்கெதிரான சவால்களில் இருந்து ஒளிந்துகொள்ளாமல், இந்திய அணியின் மீதுள்ள உண்மையான அக்கறையின் வெளிப்பாடாக தனது நிலைப்பாட்டை தெளிபடுத்தவேண்டிய ''தல''யாய பொறுப்பு தோனியிடம் மட்டுமே உள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai