Enable Javscript for better performance
வெற்றிகொண்டான்!- Dinamani

சுடச்சுட

  
  67952005_134184641175210_5456745845203436145_n

   

  டிசம்பர் 30, 2014 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பாக்ஸிங் டே போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திர சிங் தோனி திடீரென அறிவித்தார். அப்போது தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற அனைத்து டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி இழந்திருந்தது. அப்போது வரை நடைபெற்றிருந்த சுமார் 12 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே இந்திய அணி வெற்றிபெற்றிருந்தது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தது. 

  சச்சின், டிராவிட், லஷ்மண், கங்குலி, கும்ப்ளே, சேவாக், ஜாகீர் என மூத்த வீரர்கள் அனைவரும் ஓய்வுபெற்றிருந்தனர். ரோஹித், இஷாந்த், உமேஷ், ரஹானே, முரளி விஜய் ஆகியோர் தங்களின் முழுத்திறமையை வெளிப்படுத்தாத சூழ்நிலை. உள்ளூர் போட்டிகளில் மிரட்டிய அஸ்வின் அந்நிய மண்ணில் திணறியது, டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவே ரவீந்திர ஜடேஜா போராடியது என இந்திய அணி அடுத்தகட்ட நகர்வை நோக்கி மெல்ல பயணித்துக்கொண்டிருந்தது.

  இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் கோலோச்சிக்கொண்டிருந்த விராட் கோலியிடம் டெஸ்ட் கேப்டன் பொறுப்பு வழங்கப்படுகிறது. ஏற்கனவே 2014 தொடரின் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்காலிக கேப்டனாக செயல்பட்டிருந்த கோலி, 2015-ஆம் ஆண்டு முதல் முழுநேர கேப்டனாக செயல்படுகிறார். தற்காலிக கேப்டனாக அடிலெய்டில் களம் கண்ட முதல் டெஸ்டிலேயே விராட் கோலியின் அணுகுமுறை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கடைசி நாள் ஆட்டத்தில் 364 ரன்கள் என்ற கடின வெற்றி இலக்கை அடைய இந்திய அணி துணிச்சலாக செயல்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் வெற்றி வாய்ப்பும் நெருங்க கடைசியாக 48 ரன்களில் தோல்வியடைந்தது. அதுபோன்ற ஒரு கடின சூழலில் டிராவுக்காக மட்டுமே அணியை வழிநடத்தும் பெரும்பாலான கேப்டன்களுக்கு மத்தியில் வெற்றிக்காக உத்வேகம் அளித்த கேப்டனாக கோலி செயல்பட்டது பலரது மத்தியில் பாராட்டை பெற்றுத்தந்தது.

  அப்போது முதல் களத்தில் ஆக்ரோஷத்துடனும், துடிப்புடனும், வீரர்களை தொடர்ந்து ஊக்குவிப்பது என புதிய பரிணாத்துக்கு ஏற்ப டெஸ்ட் அணியையும் விராட் கோலி சிறப்பாக வழிநடத்த தொடங்கினார். பெரும்பாலும் டிராவை நோக்கி நகரும் டெஸ்ட்களுக்கு மத்தியில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தார். அப்போது முதல் வெற்றிகர கேப்டனாகவே செயல்பட்டு வருகிறார். 

  ஆட்டத்திறனில் மட்டுமல்லாமல் உடற்திறனிலும் அதிக அக்கறை செலுத்துவது தான் விராட் கோலியின் வெற்றிக்கு முக்கிய அம்சமாகும். இதையே அணியிலுள்ள இதர வீரர்களும் பின்பற்ற அறிவுறுத்தி வருகிறார். முந்தைய காலகட்டத்தில் குறைந்த அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றாலே காயமடையும் வீரர்களுக்கு மத்தியில் தற்போது அதிகளவிலான போட்டிகளில் பங்கேற்றாலும் வேகப்பந்துவீச்சாளர்கள் உட்பட அனைத்து வீரர்களும் ஆரோக்கியமாக இருக்கவும், ஒருவேளை காயமடைந்தால் விரைவில் குணமடையும் தன்மையையும் உடற்திறன் மீதான அக்கறை வெளிப்படுத்தியுள்ளது.

  வெற்றிகர இந்திய கேப்டன்

  தற்போது விராட் கோலி கேப்டனாக செயல்படத் தொடங்கி 5 ஆண்டுகள் கடந்துள்ளது. தொடர்ச்சியாக 8 தொடர்களில் வெற்றி, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக தொடரைக் கைப்பற்றிய முதல் ஆசியக் கேப்டன் என இந்திய அணியை டெஸ்ட் தரவரிசையின் முதல் இடத்துக்கு கோலி வழிநடத்திச் சென்றுள்ளார். மேலும் மே.இ.தீவுகள் தொடரைக் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 28 வெற்றிகளுடன் வெற்றிகரமான இந்திய கேப்டனாகவும் உருவெடுத்துள்ளார்.

  சௌரவ் கங்குலி 49 போட்டிகளில் 21 வெற்றி, 13 தோல்வி, 15 டிரா(அ)டை என 42.86 சதவீத வெற்றியுடனும், தோனி 60 போட்டிகளில் 27 வெற்றி, 18 தோல்வி, 15 டிரா(அ)டை என 45 சதவீத வெற்றியுடனும் ஏற்படுத்திய சாதனையை விராட் கோலி 48 போட்டிகளில் 28 வெற்றி, 10 தோல்வி, 10 டிரா(அ)டை என 58.33 சதவீதத்துடன் முறியடித்துள்ளார்.

  மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டித் தந்த விராட் கோலி, அதுமட்டுமல்லாமல் 10-க்கும் மேற்பட்ட டெஸ்ட்களில் கேப்டனாக செயல்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றியை ஈட்டிய ஒரே கேப்டன் எனும் தனித்துவ சாதனையையும் படைத்துள்ளார். இந்திய கேப்டன்களிலேயே அதிக வெற்றி சராசரியை பெற்றவர் ஆவார். அந்நிய நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் அதிக வெற்றிகளை பெற்ற (13) இந்திய கேப்டனாகவும் கோலி திகழ்கிறார். இதுவரை மொத்தம் பெற்றுள்ள 28 வெற்றிகளில் இந்தியாவில் 15 வெற்றிகளையும், இலங்கையில் 5 வெற்றிகளையும், மே.இ.தீவுகளில் 4 வெற்றிகளையும, ஆஸ்திரேலியாவில் 2 வெற்றிகளையும், தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தலா ஒரு வெற்றியையும் பதிவு செய்துள்ளார். 

  ரன்கள் அடிப்படையில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய 20 வெற்றிகளில் 10 வெற்றிகள் கோலியின் தலைமையில் பெறப்பட்டவையாகும். அதிலும் முதல் 5 இடங்களில் கோலி பெற்றுத்தந்த வெற்றியே 4 இடங்களில் அடங்கும். அந்நிய மண்ணில் 2017-ல் காலே டெஸ்டில் 304 ரன்கள் வித்தியாசத்திலும், 2019-ல் நார்த் சௌன்டில் 318 ரன்கள் வித்தியாசத்திலும் என 2 டெஸ்ட் போட்டிகளை 300 ரன்களுக்கும் மேற்பட்ட ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். மேலும் 2018, அக்டோபரில் ராஜ்கோட் டெஸ்டில் மே.இ.தீவுகளுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்களுடன் கூடிய இந்திய அணியின் மாபெரும் டெஸ்ட் வெற்றியும் கோலியின் தலைமையிலேயே இந்திய அணி பெற்றது.

  விராட் கோலியின் வேகப்படை

  இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் உண்மையாகவே வேகமெடுத்தது விராட் கோலியின் தலைமையில்தான். இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார் என துல்லியப் பந்துவீச்சாளர்களை கோலி தலைமையிலான இந்திய அணி உருவாக்கியுள்ளது. இந்த பட்டாளத்துடன் கூடிய வேகப்பந்துவீச்சு ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் போதும் 27.40 சராசரியுடன் 8.21 விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறது. அதிலும் அந்நிய மைதானங்களில் 26.49 சராசரியுடன் 10.48 விக்கெட்டுகளை சராசரியாக ஒவ்வொரு டெஸ்டிலும் வீழ்த்தி வருகிறது. ஒரு இந்திய கேப்டனின் கீழ் வேகப்பந்துவீச்சு இப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தி வருவது இதுவே முதன்முறை. கோலி தலைமையில் வேகப்பந்துவீச்சாளர்கள் 394 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். 15 முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர். 

  கோலியும் 109 மாற்றங்களும்!

  அணியில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய கேப்டனாகவும் கோலி மட்டுமே இருந்தார். வேறு எந்த கேப்டன்களும் செய்யாத காரியமாக ஒவ்வொரு போட்டியிலும் அணியில் ஏதேனும் மாற்றங்களை தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். கேப்டனாக பொறுப்பேற்று ஒரே அணியுடன் தொடர்ந்து இரு ஆட்டங்களில் களமிறங்க கோலிக்கு 39 டெஸ்ட் போட்டிகள் தேவைப்பட்டது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால், அதுவரை இந்திய அணியில் 109 மாற்றங்களைச் செய்துவிட்டார். அதாவது ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் போதும் சராசரியாக 2.27 சதவீத மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இதுபோன்ற எத்தனை மாற்றங்கள் இருந்தாலும் இந்திய அணியின் வெற்றி சராசரி மட்டும் 58.33 சதவீதமாக உயர்ந்தது. டான் பிராட்மேன் மட்டுமே கோலிக்கு அடுத்தபடியாக 2.29 சதவீத மாற்றத்துடன் அடுத்த இடத்தில் இடம்பிடித்த கேப்டனாக உள்ளார். 

  பேட்ஸ்மேனாக சோபித்த கேப்டன் கோலி

  இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களாக திகழ்ந்த பட்டோடி, கவாஸ்கர், அசாருதீன், சச்சின், கங்குலி, டிராவிட் என பலர் கேப்டனாக பொறுப்பேற்றவுடன் தங்கள் ஆட்டத்திறனில் சற்று சறுக்கலை சந்தித்தனர். ஆனால், விராட் கோலி இந்த வரிசையில் முற்றிலும் மாறுபட்ட வீரராக திகழ்கிறார். பேட்ஸ்மேனாக 41 சராசரியுடன் இருந்த கோலி, கேப்டனான உடன் 61 சராசரி அளவுக்கு உயர்ந்தார். இதுவரை கேப்டனாக செயல்பட்டுள்ள 48 போட்டிகளில் 61.19 சராசரியுடன் 4,651 ரன்களைக் குவித்துள்ளார். அதிக இரட்டைச் சதம் குவித்த கேப்டனாகவும் கோலி சாதனைப் படைத்துள்ளார். 2017-ல் தில்லி டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக 243 ரன்கள் குவித்தார். இதுவே ஒரு கேப்டனின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். அந்நிய மைதானங்களில் சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார். 2016-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக 200 ரன்கள் விளாசினார். அதிக சதங்கள் அடித்த கேப்டன்களின் அடிப்படையில் க்ரீம் ஸ்மித் (25), ரிக்கி பாண்டிங் (19) ஆகியோர் மட்டுமே முதல் இரு இடங்களில் உள்ளனர். ஆனால், இவர்கள் இருவரும் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், அடுத்த இடத்தில் உள்ள விராட் கோலி, விரைவில் இந்த சாதனையைும் தகர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

  டாஸில் மட்டுமல்ல, மேட்சிலும் முன்னேற வேண்டிய கோலி

  டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பெறும் வெற்றிகளின் பலம் டாஸில் அடங்கியுள்ளது. டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்த 28 டெஸ்ட்களில் இங்கிலாந்துக்கு எதிராக 2018-ல் ஒரேயொரு முறை மட்டுமே கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியை சந்தித்து. 18 முறை வெற்றியும், 4 டிராவும் ஆனது. இருப்பினும் டாஸில் தோற்று 2-ஆவது பேட்டிங் செய்யும் பட்சத்தில் அந்த போட்டியை இந்திய அணி வெற்றிபெற கடுமையாக போராட வேண்டியுள்ளது. குறிப்பாக கடந்த தென் ஆப்பிரிக்க மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்கள் இதற்கு சான்றாக அமைந்தது. 

  அந்நிய மைதானங்களில் கோலி தலைமையிலான இந்திய அணி 11 முறை முதலில் பந்துவீச அழைக்கப்பட்டதில், ஒரு போட்டியில் கூட இதுவரை வென்றதில்லை என்பதே வரலாற்று உண்மை. 4-ஆவது இன்னிங்ஸில் மிகக் குறுகிய இலக்குகளை விரட்டவும் இந்திய அணி திணறியது. 2015-ல் காலேவில் இலங்கைக்கு எதிராக, 2018-ல் எட்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிராக, 2018-ல் கேப்-டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக என்று குறிப்பிடும்படியாக சில ஆட்டங்கள் முன் உதாரணமாக அமைந்துள்ளன. 

  அடுத்த இலக்கு?

  அடுத்த ஆண்டு துவக்கத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக அந்நாட்டில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி முதன்முறையாக இந்திய அணியை வழிநடத்த உள்ளார். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளுக்கு எதிராகவும் அங்கு நடைபெறும் தொடர்களை கைப்பற்றுவது. 2021-ல் வழங்கப்பட உள்ள முதல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றுவது. ஒரு கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் க்ரீம் ஸ்மித் குவித்த அதிகபட்ச ரன்கள் (8,659) அதிக சதங்கள் (25), அதிக வெற்றிகள் (53) ஆகியவற்றை முறியடிப்பது உள்ளிட்ட முக்கிய தடைகளையும் கடந்து வெற்றிகொள்வதுதான். 'கிங்' கோலி என்ற செல்லப் பெயருக்கு ஏற்ப செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றிகொண்டானாக திகழும் விராட் கோலியை நாமும் வாழ்த்துவோம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai