கோலியின் அதகளப் படை இது: பாடம் கற்றுக்கொள்ளுமா இங்கிலாந்து?

​இந்தியாவுடனான லார்ட்ஸ் டெஸ்டில் 151 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்த இங்கிலாந்து பாடம் கற்றுக்கொண்டு மூன்றாவது டெஸ்டில் எழுச்சி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோலியின் அதகளப் படை இது: பாடம் கற்றுக்கொள்ளுமா இங்கிலாந்து?


இந்தியாவுடனான லார்ட்ஸ் டெஸ்டில் 151 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்த இங்கிலாந்து பாடம் கற்றுக்கொண்டு மூன்றாவது டெஸ்டில் எழுச்சி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

போரில் எத்தனை எதிரி வீரர்களைக் கொல்கிறான் என்பதைத் தாண்டி, தன் படை வீரர்கள் எத்தனை பேரின் உயிர்களைக் காப்பாற்றுகிறான் என்பதிலிருந்துதான் ஒரு தலைவன் உருவாகிறான். அப்படியான ஒரு படைத் தலைவன்தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.

வெற்றியை நோக்கி மட்டுமே ஓடத் துடிக்கும் ஆக்ரோஷ ராட்சசன், கேப்டனாகப் பொறுப்பேற்று விளையாடிய முதல் டெஸ்டிலேயே இதற்கான விதையைத் தூவி விட்டார்.

கோலிக்கு இயல்பிலேயே ஒரு குணாதிசயம் உண்டு என்று தோன்றுகிறது. களத்துக்கு வந்துவிட்டால் நான் எவருக்கும் சளைத்தவன் அல்ல என்பதுதான் அது. இந்த குணாதிசயம், எதிரணி வீரர்களுக்கான உரிய மரியாதையையும் உள்ளடக்கியிருக்கும்.

அடித்தளம் போட்ட அடிலெய்ட்:

2014 ஆஸ்திரேலிய பயணத்தின்போது அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனி அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால், முதன்முறையாக அணியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றார் கோலி.

இதற்கு முந்தைய இங்கிலாந்து பயணத்தில் தொடர் தோல்வி, முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன் பொறுப்பு என பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அடிலெய்ட் டெஸ்ட் ஆட்டத்தை எதிர்கொண்டார். இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள கோலிக்கு உதவியது அவரது குணாதிசயம்தான். அதுவே வெற்றி பெற வேண்டும் என்கிற உந்துதலையும் ஆக்ரோஷத்தையும் கோலிக்குத் தருகிறது.

அந்த டெஸ்ட் ஆட்டத்தின் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்திருந்தது. 363 ரன்கள் முன்னிலை.

கடைசி நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்ததால், இந்திய அணிக்கு 364 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய மண்ணில் கடைசி நாள் ஆட்டத்தில் மட்டும் 364 ரன்கள் என்ற இலக்கை அடைவது என்பது கடினத்திலும் கடினமான ஒன்று. முதன்முறையாகப் பொறுப்பேற்றுள்ள இளம் கேப்டன் தலைமையில் களமிறங்கும் அணிக்கு நிச்சயம் சாத்தியமற்றது என்ற பார்வையே பெருமளவில் இருந்தது. ஆனால், இந்திய அணியோ அவை அனைத்தையும் உடைத்தெறிந்து வெற்றியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.

வெற்றியின் அருகே சென்று தோல்வியைச் சந்தித்தாலும், இப்படியொரு ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்தும் என எதிர்பார்த்திராத ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது கோலியின் படை. 

"ஆஸ்திரேலிய அணி கடைசி நாளில் எத்தனை ரன்களை இலக்காக நிர்ணயித்தாலும் நாம் அந்த இலக்கை அடைகிறோம்.." 4-ம் நாள் இரவு அணி வீரர்களிடம் இளம் கேப்டன் கோலி கூறியது இது. ஆஸ்திரேலியா மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் உலகமும் இந்த ஆட்டத்தைக் கண்டு அதிர்ந்து போனதற்குக் காரணம் கோலியின் இந்த அணுகுமுறைதான்.

தடுப்பாட்டத்துக்கு வேலையில்லை, தோற்றாலும் பரவாயில்லை வெற்றியை நோக்கி ஓட வேண்டும் என்பதை கோலி கூறியதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் டெஸ்ட் தொடர் முழுவதும் கோலியை அடிக்கடி வம்புக்கு இழத்துக் கொண்டிருந்தார். விளைவு ஜான்சனின் பேச்சுக்கு எல்லாம் சேர்த்து வைத்து, தொடர் முழுவதும் தனது பேட்டின் மூலம் பதிலடி தந்தார். அந்தத் தொடரில் மட்டும் 4 சதங்கள் விளாசினார் கோலி.

கோலியின் வெற்றிக்கான ஆக்ரோஷத்தைப் பார்த்த உலகம், இதே டெஸ்ட் தொடரில்தான் அவரது மற்றொரு ஆக்ரோஷத்தையும் அறிந்துகொண்டது. ஆனால், ஆஸ்திரேலியா இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டது.

2018-இல் இந்திய அணி ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டதுபோது, கோலிக்கு ஆஸ்திரேலிய வகுத்த மிக முக்கியமான வியூகமே அவரிடம் யாரும் வம்பிழுக்கக் கூடாது என்பதுதான். ஒரு வீரருக்கு எந்த இடத்தில் பந்துவீச வேண்டும், எப்படி பந்துவீச வேண்டும், எப்படி பீல்டிங் அமைக்க வேண்டும், எப்படி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டிய எதிரணி கோலியிடம் எவரும் வம்பிழுக்கக் கூடாது என்பதையே கடுமையான விதிமுறையாகக் கடைப்பிடிக்க முடிவெடுத்ததன் மூலம் கோலியின் ஆக்ரோஷத்தையும் அது ஏற்படுத்தக்கூடிய விளைவுகளையும் புரிந்துகொள்ள முடிகிறது.

2014 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு முழு நேர கேப்டனாக செயல்படத் தொடங்கிய விராட் கோலி, தனக்குள் இருக்கும் குணாதிசயங்களை அணியின் குணாதிசயங்களாக மாற்றத் தொடங்கினார். அப்படிப்பட்ட மனநிலையைக் கொண்டவர்களையே அணியில் வைத்துக்கொள்வதில் கவனமாக இருக்கிறார்.

இப்படியாக முழு கோலி அணியாக மாறியிருக்கிறது இன்றைய இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி. இதற்குச் சான்று லார்ட்ஸ் டெஸ்டின் வெற்றி.

இங்கிலாந்து செய்த தவறு?

லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணியே முதல் 4 நாள்களில் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அவர்கள் தவறவிட்ட இடம், ஆண்டர்சன் விஷயத்தில்தான். ஆண்டர்சனுக்கு ஜாஸ்பிரித் பும்ரா வீசிய பவுன்சர் ஓவர் இங்கிலாந்தைக் காயப்படுத்தியிருக்கிறது. ஆண்டர்சனும் பும்ராவிடம் இதற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்குப் பதிலடி தர நினைத்தது இங்கிலாந்து. பும்ரா ஒருவரை சீண்டினால் மொத்த அணியும் ஒன்று சேர்ந்து பதிலடி தருவோம் என்ற பாணியில் விளையாடியது இந்திய அணி. இந்த விஷயத்தில் கேப்டன் கோலி முன்நின்று வழிநடத்தினார்.

இதன் விளைவு கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்துக்குக் கடுமையான நெருக்கடியை உண்டாக்கி, ஓவருக்கு ஓவர் அழுத்தம் தந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியைப் பறித்தது இந்தியா.

களத்திலிருந்த கோலியின் ஆக்ரோஷமே வெற்றிக்கு முக்கியப் பங்காக இருந்தது. அதுதான் அணியையும் ஆக்ரோஷப்படுத்தியிருக்கிறது. கோலி சதமடித்திருந்தால் அணிக்கு நம்பிக்கையைத் தந்திருக்கலாம். ஆனால், வெற்றிக்கான நம்பிக்கையைவிட முக்கியமானது வெற்றியடைய வேண்டும் என்கிற ஆக்ரோஷம்.     

ஒருவேளை இந்தியாவை சீண்ட வேண்டும் என்ற மனப்பான்மையில் விளையாடாமல் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலே இங்கிலாந்து ஆட்டத்தில் ஆதிக்கத்தைத் தொடர்ந்திருக்கலாம். 

ஆனால், களத்தில் கோலியையோ அவரது வீரர்களையோ சீண்டிவிடக் கூடாது என்ற ஊரறிந்த, உலகறிந்த யதார்த்த விஷயத்தை இங்கிலாந்து உணரத் தவறியதன் பரிசுதான் லார்ட்ஸ் டெஸ்ட் தோல்வி.

2018 டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா கடைப்பிடித்த "யாரும் வம்பிழுக்கக் கூடாது" என்ற விதிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்கிற பாடத்தை மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்துக்கு முன் கற்றுக்கொள்ளுமா இங்கிலாந்து?

பதில்.. இன்னும் 4 நாள்களில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com