இந்திய அணியின் டெஸ்ட் தொடர் வெற்றி: முக்கிய அம்சங்கள்

ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் முதல்முதலாக தோல்வி பெற்ற அணியில் இடம்பெற்றுள்ளார் அஜாஸ் படேல். 
இந்திய அணியின் டெஸ்ட் தொடர் வெற்றி: முக்கிய அம்சங்கள்


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடா் நடைபெற்றது. கான்பூா் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது. 

மும்பை டெஸ்ட் வெற்றியின் மூலமாக இந்திய அணியும் அஸ்வினும் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்கள். அவற்றின் விவரம்:

* 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற பெரிய வெற்றி இது. இதற்கு முன்பு, 2015-ல் தில்லியில் தெ.ஆ. அணிக்கு எதிராக 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சாதனையை மும்பை டெஸ்ட் வெற்றி முறியடித்துள்ளது. அதேபோல நியூசிலாந்துக்கும் ரன்கள் வித்தியாசத்தில் இது மிகப்பெரிய தோல்வி. இதற்கு முன்பு 2007-ல், தெ.ஆ. அணிக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் 358 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

* சொந்த மண்ணில் 300 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் அஸ்வின். இந்தியாவில் அனில் கும்ப்ளே எடுத்த 350 விக்கெட்டுகளுக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் உள்ளார். சொந்த மண்ணில் இதுவரை 6 வீரர்களே 300+ டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். 

* இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்டுகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் அஸ்வின். 66 விக்கெட்டுகள். இதற்கு முன்பு ஹேட்லி 65 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். 

* ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் முதல்முதலாக தோல்வி பெற்ற அணியில் இடம்பெற்றுள்ளார் அஜாஸ் படேல். 

* 2021-ல் அஸ்வின் மொத்தமாக 52 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வருடம் 50 விக்கெட்டுகள் எடுத்த ஒரே வீரர் அவர்தான். 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் அஸ்வின் தலா 50+ விக்கெட்டுகளை எடுத்திருந்தார். ஒரு வருடத்தில் 50+ விக்கெட்டுகளை அதிக முறை எடுத்த பந்துவீச்சாளர்கள் - வார்னே (8), முரளிதரன் (6), மெக்ராத் (5). 

* டெஸ்ட் தொடரில் 14 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின், தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இது அஸ்வினின் 9-வது தொடர் நாயகன் விருதாகும். இதற்கு முன்பு, மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தொடர் நாயகன் விருதை அஸ்வினே வென்றார். 

தொடர் நாயகன் விருதை அதிகமுறை வென்றவர்களின் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இன்னும் இருமுறை தொடர் நாயகன் விருதுகளை வென்றால் முதல் இடத்தில் உள்ள முத்தையா முரளிதரனின் சாதனையைச் சமன் செய்துவிடுவார்.

டெஸ்ட்: தொடர் நாயகன் விருதுகள்

முரளிதரன் - 11

அஸ்வின் - 9

காலிஸ் - 9

இம்ரான் கான் - 8

வார்னே - 8

ஹேட்லி - 8


சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வகைப் போட்டிகளிலும் 50 வெற்றிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்கிற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 2008 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 97 டெஸ்டுகள், 254 ஒருநாள், 95 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை எந்தவொரு வீரரும் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 50 வெற்றிகளில் பங்கேற்றதில்லை. மும்பை டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம்பெற்று 50-வது வெற்றியில் பங்களித்துள்ளார் விராட் கோலி. இதனால் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 50 வெற்றிகளைக் கண்ட முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இந்தச் சாதனை வேறு எந்த கிரிக்கெட் வீரருக்கும் கிடையாது.

விராட் கோலி

டெஸ்டுகள்: ஆட்டங்கள் - 97, வெற்றிகள் - 50
ஒருநாள்: ஆட்டங்கள் - 254, வெற்றிகள் - 153
டி20: ஆட்டங்கள் - 95, வெற்றிகள் - 59

* மும்பை டெஸ்ட் வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் நெ.1 இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. 

* நியூசிலாந்து அணி கடைசியாக விளையாடிய 11 டெஸ்டுகளில் இப்போதுதான் முதல் தோல்வியை அடைந்துள்ளது. கரோனா பரவல் தொடங்குவதற்கு முன்பு 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்தில் இந்தியாவை வீழ்த்தியதுடன் இந்த வெற்றி வலம் தொடங்கியது. தொடர்ந்து 6 டெஸ்டுகளில் வெற்றி பெற்று இங்கிலாந்தில் ஒரு டெஸ்டை டிரா செய்து அடுத்த டெஸ்டை வென்று தொடரை வென்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் இந்தியாவைத் தோற்கடித்து கான்பூர் டெஸ்டை டிரா செய்தது. அதுவரை 10 டெஸ்டுகளில் தோற்காத நியூசிலாந்து அணி, மும்பையில் விளையாடிய 11-வது டெஸ்டில் தோற்றுவிட்டது. 

* சொந்த மண்ணில் விராட் கோலி தலைமையில் இந்திய டெஸ்ட் அணி 

31 ஆட்டங்கள்
24 வெற்றிகள்
2 தோல்விகள் 
5 டிரா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com