2 வருடங்களாக ஒரு சதமும் இல்லை: வேதனையை ஏற்படுத்தும் விராட் கோலி!
By எழில் | Published On : 24th November 2021 11:59 AM | Last Updated : 24th November 2021 11:59 AM | அ+அ அ- |

விராட் கோலி களமிறங்கினாலே சதமடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இப்போது மாறிவிட்டது. ஒரு சதமாவது அடித்தால் நல்லது என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள் ரசிகர்கள்.
கோலி சதமடித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை யாரால் நம்பமுடியும்! கடைசியாக, 2019 நவம்பர் 23 அன்று வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. அதற்குப் பிறகு டெஸ்ட், ஒருநாள், டி20 என விளையாடிய 56 இன்னிங்ஸிலும் அவர் ஒரு சதமும் எடுக்கவில்லை. அதற்கு முன்பு தொடர்ச்சியாக 25 இன்னிங்ஸில் தான் சதமடிக்காமல் இருந்துள்ளார். இந்தமுறை இடைவெளி மிகவும் அதிகமாகிவிட்டது.
டெஸ்டில் 27 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களும் என மொத்தமாக 70 சதங்கள் எடுத்துள்ளார் கோலி.
இதற்கு முன்பு இரு தருணங்களில் மட்டுமே நீண்டநாளாக சதமடிக்காமல் இருந்துள்ளார்.
கோலி சதமடிக்காமல் இருந்த காலகட்டம்
56 இன்னிங்ஸ் - நவ. 2019 - தற்போது வரை
25 இன்னிங்ஸ் - பிப். 2014 - அக். 2014
24 இன்னிங்ஸ் - பிப். 2011 0 செப். 2011
கோலியின் கடைசி 56 இன்னிங்ஸ்: 1989 ரன்கள், சராசரி - 40.59, அரை சதங்கள் - 20 (அதிகபட்சம் 94*).
ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக ஆகஸ்ட் 2019-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்தார். யார் கண் பட்டதோ, இன்றுவரை மற்றொரு சதத்தைக் காண முடியவில்லை. (டி20யில் ஒரு சதமும் அடித்ததில்லை.)
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் சதமடித்து இந்நிலையை மாற்றுவாரா விராட் கோலி?