

அணியில் விளையாடிய ஒருவரைத் தவிர அனைவரும் டக் அவுட்! ஒரு வீராங்கனை மட்டும் 160 ரன்கள்! இதில் அந்த அணி வெற்றியும் பெற்றுள்ளது.
கனவில்கூட இது சாத்தியமில்லைதானே! ஆனால் நிஜத்தில் இப்படி ஒரு கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது, தென் ஆப்பிரிக்காவில்.
மெபுமலங்கா - ஈஸ்டர்ன் U-19 மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி ப்ரெடோரியாவில் சமீபத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மெபுமலங்கா அணியில் ஒருவரைத் தவிர பேட்டிங் செய்த எல்லோரும் வந்த வேகத்தில் வெளியேறினார்கள். ஆச்சரியம், ஒருவராலும் ஒரு ரன்கூட எடுக்கமுடியாமல் போனாது. ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்வார்ட் மட்டும் இன்னொருபுறம் சிக்ஸும் பவுண்டரிகளுமாக அடித்துக்கொண்டிருந்தார். இந்தப் போட்டியை நேரில் பார்த்தவர்களுக்கு இது வினோதமான அனுபவத்தை அளித்தது.
தொடர்ந்து விழுகிற விக்கெட்டுகளுக்கு மத்தியில் எப்போதெல்லாம் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்தச் சமயத்தில் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை தனி ஒருத்தியாக உயர்த்தினார் ஸ்வார்ட். பேட்டிங் செய்த அனைத்து வீராங்கனைகளும் முட்டையில் அவுட் ஆக, ஸ்வார்ட் மட்டும் 160 ரன்கள் எடுத்து அவருடைய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுக்க உதவினார். இதில் 12 சிக்ஸர்களும் 18 பவுண்டரிகளும் அடங்கும். அணிக்கு உதிரியாக 9 ரன்கள் கிடைத்தன. ( ஸ்கோர்கார்டு உதவி: க்ரிக்இன்ஃபோ)
பேட்டிங் உலகமகா சொதப்பலாக இருந்தாலும் பெளலிங்கில் மெபுமலங்கா அணி அசத்தியது. பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பெளலிங்கிலும் பட்டையைக் கிளப்பினார் ஸ்வார்ட். அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஈஸ்டர்ன் அணி 20 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
டி20 போட்டியில் நடைபெற்ற இந்த அதிசயம் பற்றி கிரிக்கெட் உலகம் ஆச்சர்யத்துடன் பார்க்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.