இந்தியா 600 ரன்கள்: தேநீர் இடைவேளையின்போது இலங்கை 38/1

தேநீர் இடைவேளையின்போது இலங்கை அணி 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது...
இந்தியா 600 ரன்கள்: தேநீர் இடைவேளையின்போது இலங்கை 38/1

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 600 ரன்கள் எடுத்துள்ளது. தேநீர் இடைவேளையின்போது இலங்கை அணி 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கையின் காலே நகரில் புதன்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா அறிமுக வீரராக களமிறங்கினார். இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஷிகர் தவன் 168 பந்துகளில் 31 பவுண்டரிகளுடன் 190 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். புஜாரா 247 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 144, ரஹானே 94 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 39 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்கள். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.

இந்நிலையில் இன்று 257 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார் புஜாரா. தவன் தவறவிட்ட இரட்டைச் சதத்தை புஜாரா எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதீப் பந்துவீச்சில் 153 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரஹானேவும் 57 ரன்களில் வெளியேறினார். 

தனது 50-வது டெஸ்ட் போட்டியை விளையாடும் அஸ்வின் வேகமாக ரன்கள் குவித்தார். ஆனால், 47 ரன்களில் பிரதீப் பந்துவீச்சில் வெளியேறினார். ஓரளவு நல்ல தொடக்கம் கண்ட சாஹா, ஹராத் பந்துவீச்சில் 16 ரன்களில் வீழ்ந்தார்.

மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 503 ரன்கள் எடுத்துள்ளது. 

பிறகு, 15 ரன்களில் ஜடேஜா வெளியேறினார். இதனால் இந்திய அணி 600 ரன்களை எடுப்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அதன்பிறகு ஜோடி சேர்ந்த பாண்டியா - சமி இலங்கையின் பந்துவீச்சை நொறுக்கித் தள்ளினார்கள். எதிர்பாராதவிதமாக சமி 3 சிக்ஸர்கள் அடித்து இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். பாண்டியாவும் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக எடுத்து இந்திய அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினார்.

பாண்டியா - சமி இணைந்து 62 ரன்கள் எடுத்து இந்திய அணிக்குக் கடைசிக்கட்டத்தில் மிகவும் உதவினார்கள். சமி 30 ரன்களில் வெளியேறினார். கடைசி விக்கெட்டுக்கு உமேஷ் யாதவும் பாண்டியாவும் 21 ரன்கள் எடுத்தார்கள். பாண்டியா 49 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்தார். இந்திய அணி 600 ரன்களை எட்டியபிறகு பாண்டியாவும் வீழ்ந்தார். 

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 133.1 ஓவர்களில் 600 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இலங்கைத் தரப்பில் பிரதீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மிகவும் கடினமான இலக்கை விரட்டவேண்டிய நெருக்கடியில் பேட்டிங் செய்ய வந்தார்கள் இலங்கையின் தொடக்க வீரர்கள். திமுத் கருணாரத்னே 2 ரன்களில் உமேஷ் யாதவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். தேநீர் இடைவேளையின்போது இலங்கை அணி 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது. தரங்கா 24, குணதிலகா 12 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com