நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ஜோ ரூட் சதம்; வெற்றியோடு தொடங்கியது இங்கிலாந்து

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து. இதன்மூலம் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியோடு

News image
சதமடித்த மகிழ்ச்சியில் ஜோ ரூட்.
Updated On :29 ஜனவரி 2024, 2:39 pm

DIN

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து. இதன்மூலம் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது.
இங்கிலாந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜோ ரூட் 129 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் குவித்தார்.
லண்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த வங்கதேசத்தின் இன்னிங்ஸை தமிம் இக்பாலும், செளம்ய சர்க்காரும் தொடங்கினர். இந்த ஜோடி நிதானமாக ஆட முதல் 10 ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது வங்கதேசம்.
ஜேக் பால் வீசிய 11-ஆவது ஓவரில் செளம்ய சர்க்கார் ஒரு சிக்ஸரையும், இரு பவுண்டரிகளையும் விளாச, அந்த ஓவரில் 16 ரன்கள் கிடைத்தன. வங்கதேசம் 12 ஓவர்களில் 56 ரன்கள் எடுத்திருந்தபோது சர்க்காரின் விக்கெட்டை இழந்தது. அவர் 34 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த இம்ருள் கயெஸ் 19 ரன்களில் நடையைக் கட்டினார். அப்போது வங்கதேசம் 19.2 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்திருந்தது.
தமிம் சதம்: இதையடுத்து கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் களமிறங்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய தமிம் இக்பால் 71 பந்துகளில் அரை சதம் கண்டார். தமிம்-ரஹிம் ஜோடி தொடர்ந்து சிறப்பாக ஆட, 28-ஆவது ஓவரில் 150 ரன்களை எட்டியது வங்கதேசம்.
இதன்பிறகு அதிரடியாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம், ஜோ ரூட் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி, 48 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். அவரைத் தொடர்ந்து தமிம் இக்பால் 124 பந்துகளில் சதமடித்தார். ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 9-ஆவது சதம் இது.
3-ஆவது விக்கெட்டுக்கு 166: இந்த ஜோடி தொடர்ந்து அசத்தலாக ஆட, 44-ஆவது ஓவரில் 250 ரன்களை எட்டியது வங்கதேசம். அந்த அணி 261 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. பிளங்கெட் வீசிய 45-ஆவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் தமிமும், ரஹிமும் ஆட்டமிழந்தனர். தமிம் இக்பால் 142 பந்துகளில் 3 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் குவித்தார். முஷ்பிகுர் ரஹிம் 72 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 166 ரன்கள் குவித்தது.
பின்னர் வந்த ஷகிப் அல்ஹசன் 10, சபீர் ரஹ்மான் 24 ரன்கள் சேர்த்து வெளியேற, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது வங்கதேசம்.
இங்கிலாந்துக்கு எதிராக வங்கதேசம் 300 ரன்கள் குவிப்பது இதுவே முதல்முறையாகும். இங்கிலாந்து தரப்பில் லியாம் பிளங்கெட் 10 ஓவர்களில் 59 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அலெக்ஸ் ஹேல்ஸ் 95: பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் 1 ரன்னில் நடையைக் கட்ட, அலெக்ஸ் ஹேல்ஸுடன் இணைந்தார் ஜோ ரூட். இந்த ஜோடி அசத்தலாக ஆட, 10-ஆவது ஓவரில் 50 ரன்களை எட்டியது இங்கிலாந்து.
இதன்பிறகு தொடர்ந்து சிறப்பாக ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் 52 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். மறுமுனையில் ஜோ ரூட்டும் அசத்தலாக ஆட, 19-ஆவது ஓவரில் 100 ரன்களை எட்டியது இங்கிலாந்து.
இதன்பிறகு அதிரடியாக ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ், சபீர் ரஹ்மான் வீசிய 28-ஆவது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாச, 95 ரன்களை எட்டினார். அவர் சதமடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அடுத்த பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் ஆக, இங்கிலாந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
அவர் 86 பந்துகளில் 2 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தது.
ஜோ ரூட் சதம்: இதையடுத்து ஜோ ரூட்டுடன் இணைந்தார் கேப்டன் இயான் மோர்கன். இந்த ஜோடி அசத்தலாக ஆட, இங்கிலாந்தின் வெற்றி எளிதானது. மோர்கன் 45 பந்துகளில் அரை சதமடிக்க, ஜோ ரூட் 115 பந்துகளில் சதம் கண்டார். இது அவருடைய 10-ஆவது சதமாகும்.
மொஸாதீக் பந்துவீச்சில் ஜோ ரூட் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளை விரட்ட, 47.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்து வெற்றி கண்டது இங்கிலாந்து. ஜோ ரூட் 129 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 133, மோர்கன் 61 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வங்கதேசம் தரப்பில் மோர்ட்டஸா, சபீர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஜோ ரூட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.