

என்ன மாயம் செய்கிறாய் ராகுல் திரிபாதி?
26 வயது. மஹாராஷ்டிரா வீரர். 26 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல்-லுக்கு முன்புவரை திரிபாதி என்கிற பெயரை இந்திய ரசிகர்கள் கேள்விப்பட்டது கிடையாது. ஆனால், இன்று இந்திய அணிக்குத் தேர்வாகும் தகுதியை வளர்த்துக்கொண்டுள்ளார்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்தது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ். இதன்மூலம் 7-ஆவது வெற்றியைப் பெற்ற புணே அணி, புள்ளிகள் பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியது. புணேவின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியபோதும், தனியொருவராக நின்று கொல்கத்தா பெளலர்களை பந்தாடிய தொடக்க வீரர் ராகுல் திரிபாதி, 52 பந்துகளில் 7 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தார். ஐபிஎல் வழியாக இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னொரு புதிய நட்சத்திரம் கிடைத்துள்ளார் என்கிற மகிழ்ச்சி ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனிடமும் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் புணே அணியில் அஜிங்க்ய ரஹானே 11 ரன்களில் நடையைக் கட்ட, கோல்ட்டர் நைல் வீசிய மூன்றாவது ஓவரில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கிய திரிபாதி, அதே ஓவரில் மேலும் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை பறக்கவிட, அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் கிடைத்தன. தொடர்ந்து வேகம் காட்டிய திரிபாதி, உமேஷ் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்ட, 4 ஓவர்களில் 47 ரன்களை எட்டியது புணே. கோல்ட்டர் நைல் வீசிய 6-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை பறக்கவிட்ட திரிபாதி, 23 பந்துகளில் அரை சதம் கண்டார்.
திரிபாதியின் அதிரடியால் 12 ஓவர்களில் 110 ரன்களை எட்டியது புணே. குல்தீப் யாதவ் வீசிய 13-ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார் திரிபாதி. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட திரிபாதி, புணே 150 ரன்களை எட்டியபோது ஆட்டமிழந்தார். அவர் 52 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். புணே வெற்றியடைய, ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஒரு ஆட்டத்தின் மூலம் இந்திய ரசிகர்களிடம் அழுத்தமாகத் தன்னை நிரூபித்துள்ளார் திரிபாதி. யார் இவர்? எங்கிருந்து வந்தார் என்று கேட்கும் அளவுக்கு ரசிகர்கள் மனத்தில் அழுத்தமாகப் பதிந்துவிட்டார்.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த திரிபாதி, ராணுவ வீரரின் மகன். திரிபாதியின் அப்பா, உத்தர பிரதேச அணிக்காக ஜூனியர் அணியில் விளையாடியவர். அதே ஆர்வம் திரிபாதிக்கும் தொற்றிக்கொண்டது. புணேவுக்கு மாற்றலாகி வந்தபிறகு மகனுக்கு உரிய கிரிக்கெட் பயிற்சிகள் கிடைக்கவேண்டும் என்பதில் தந்தை அக்கறையுடன் இருந்துள்ளார். படிப்பில் முக்கியமாக கணிதத்தில் ஆர்வம் கொண்டாலும் கிரிக்கெட் மீதான காதலால் அதில் அதிக ஈடுபாடு செலுத்தினார் திரிபாதி. பிஎஸ்சி கணிதம் படித்தாலும் புணேவின் கிரிக்கெட் கிளப்களில் ஆட ஆரம்பித்து தன் திறமையை மெருகேற்றிக்கொண்டார்.
கிரிக்கெட்டில் இவர் அதிக கவனம் பெற்றதே, அதிரடி ஆட்டத்தினால்தான். உள்ளூர் போட்டிகளில் இருமுறை ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்து அனைவரையும் மலைக்கவைத்துள்ளார். ஆனால் ரஞ்சி போட்டியில் பொறுப்புடன் கவனமாக விளையாடுகிறவராகப் பெயர் பெற்ற திரிபாதி, 2014-ம் ஆண்டு சிறந்த U-25 வீரராக பிசிசிஐயால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். 2013-ல் மஹாராஷ்டிரா ரஞ்சி அணிக்குத் தேர்வானார். விஜய் ஹசாரே போட்டியில் ஓர் ஆட்டத்தில் 95 ரன்கள் எடுத்தார். அதன் அடிப்படையில் ரூ. 10 லட்சத்துக்கு ஏலத்தில் இவரைத் தேர்வு செய்தது புணே அணி. இன்று அவருடைய மதிப்பு பல கோடிகளுக்கு உயரவேண்டிய நிலைக்கு அணிக்குப் பங்களிப்பு செய்துள்ளார் திரிபாதி.
நேற்றைய ஆட்டத்தில் திரிபாதி எடுத்த 93 ரன்களில் 78 ரன்கள் சிக்ஸர்கள், பவுண்டரிகள் மூலமாக வந்தவை. இது எப்படிச் சாத்தியம்?
இப்படித்தான் ஆடவேண்டும் என்று முடிவெடுத்திருந்தால் சொதப்பியிருக்கும். ஏனெனில் கொல்கத்தா அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள். எனவே பந்தைச் சரியாகக் கணித்து ஆடவேண்டும் என்பதே என் திட்டமாக இருந்தது. எதையும் யோசிக்காமல் களத்தில் ஆடவந்தேன். அதனால்தான் என்னால் அப்படி ஆடமுடிந்தது. நான் சதத்தைத் தவறவிட்டாலும் அணி ஜெயித்ததுதான் முக்கியம் என்கிறார் திரிபாதி.
இதுதான் திரிபாதிக்கு முதல் ஐபிஎல். ஆனாலும் அவருடைய மாநில அணியான மஹாராஷ்டிராவில் இவருக்குப் பெரிய பெயரில்லை. டி20 அணியில் இவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. 50 ஓவர் விஜய் ஹசாரே போட்டியில் முதல் நான்கு ஆட்டங்களில் இவர் தேர்வாகவில்லை. ஐபிஎல் ஏலத்திலும் கடைசிச் சுற்றில்தான் புணே அணி இவரைத் தேர்வு செய்தது. ஐபிஎல் ஆரம்பித்தபிறகு முதலிரண்டு ஆட்டங்களில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால் இன்று இவருடைய முக்கிய பங்களிப்புகளால் புணே அணி தன்னுடைய கடைசி 7 ஆட்டங்களில் ஆறில் வென்று 14 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நேற்றைய ஆட்டத்தின்போது வர்ணனையில் ரவி சாஸ்திரி, திரிபாதியை மிகவும் உயர்வாகப் பேசினார். இருமுறை ஆறு சிக்ஸர்கள் தொடர்ச்சியாக அடித்ததைக் குறிப்பிட்ட அவர், திரிபாதையை இந்தியத் தேர்வுக்குழு நிச்சயம் கண்காணிக்கும். அதனால் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குத் தேர்வாகவும் வாய்ப்புண்டு என்றார். அவ்வளவு சீக்கிரம் பெரிய கனவு வேண்டாம். இதே திறமை, இதே பங்களிப்பு, இதே விடாமுயற்சி தொடர்ந்து இருக்கவேண்டும். அப்படி இருந்தாலே நடக்கவேண்டியவை எல்லாம் தானாக நடந்துவிடும். அந்தத் தகுதி திரிபாதிக்கு உண்டு.
புள்ளிவிவரங்கள்
* அதிக ரன்கள் எடுத்த ஐபிஎல் வீரர்கள் பட்டியலில் 5-வது இடம். 9 ஆட்டங்களில் 352 ரன்கள்.
* 16 சிக்ஸர்கள் எடுத்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் 7 சிக்ஸர்கள்.
* இந்த ஐபிஎல்-லில் திரிபாதியின் ஸ்கோர்கள்: 10, 33, 31, 59, 45, 38, 37, 6, 93. ஸ்மித், ஸ்டோக்ஸ், தோனி ஆகியோரை விடவும் அதிக ரன்கள் எடுத்துள்ளார்.
* இந்த ஐபிஎல்-லில் பவர்பிளே-யில் அதிக ரன்கள் எடுத்தவர் திரிபாதி. 144 பந்துகளில் 251 ரன்கள். அடுத்ததாக வார்னர். 160 பந்துகளில் 238 ரன்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.