இந்தியாவுக்கு எதிரான ஒரேயொரு டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகளின் கிங்ஸ்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஜடேஜா இடம்பெற்றார். இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, இந்தியாவின் இன்னிங்ûஸ கேப்டன் விராட் கோலியும், ஷிகர் தவனும் தொடங்கினர்.
சாமுவேல் பத்ரீ வீசிய முதல் ஓவரில் கோலி ஒரு பவுண்டரியையும், தவன் இரு பவுண்டரிகளையும் விளாசினர். டெய்லர் வீசிய அடுத்த ஓவரில் கோலி இரு பவுண்டரிகளையும், தவன் ஒரு பவுண்டரியையும் விரட்டினர். கோலியும், தவனும் தொடர்ந்து வேகம் காட்ட, 5 ஓவர்களில் 54 ரன்களை எட்டியது இந்தியா.
வில்லியம்ஸ் வீசிய 6-ஆவது ஓவரின் முதல் இரு பந்துகளில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசிய கோலி, அடுத்த பந்தில் சுநீல் நரேனிடம் கேட்ச் ஆனார். அவர் 22 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார். கோலி-தவன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.3 ஓவர்களில் 64 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து ரிஷப் பந்த் களமிறங்க, ஷிகர் தவன் 12 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார். இதன்பிறகு ரிஷப் பந்துடன் இணைந்தார் தினேஷ் கார்த்திக். இந்த ஜோடி அதிரடியாக ஆட, 11 ஓவர்களில் 105 ரன்களை எட்டியது இந்தியா.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் அரை சதத்தை நழுவவிட்டார். அவர் 29 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் சேர்த்து சாமுவேல்ஸ் பந்துவீச்சில் போல்டு ஆனார். கார்த்திக்-பந்த் ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களம்புகுந்த தோனி 2 ரன்களில் நடையைக் கட்ட, ரிஷப் பந்த் 35 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்த கேதார் ஜாதவ் 4 ரன்களில் நடையைக் கட்ட, கடைசிக் கட்டத்தில் ஜடேஜா அதிரடியாக ஆடினார்.
இதனால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது இந்தியா. ஜடேஜா 13, அஸ்வின் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் டெய்லர், வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்பிறகு நம்பிக்கையுடன் களமிறங்கிய மே.இ. தொடக்க வீரர்கள் கெயில் - எவீன் லீவிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள்.
15 மாதங்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியிருக்கும் கெயில் இந்த ஆட்டத்தில் பெரிய அளவில் ரன் குவிக்க முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல எவின் லீவிஸ், இதற்கு முன்னர் இந்தியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் விளையாடியபோது 49 பந்துகளில் சதமடித்தார். எனவே இந்த ஆட்டத்தில் அவர் மீதும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. முகமது சமி வீசிய 4-வது ஓவரில் இருவரும் 19 ரன்கள் எடுத்தார்கள். அதிலிருந்து அதிரடி ஆட்டம் தொடங்கியது. அஸ்வின் வீசிய அடுத்த ஓவரில் அடுத்தடுத்தப் பந்துகளில் இரு சிக்ஸர் அடித்தார் லீவிஸ். 24 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் அரை சதத்தை எட்டினார். மேலும் லீவிஸ் கொடுத்த இரு கேட்சுகளை இந்திய வீரர்கள் தவறவிட்டார்கள். இதனால் அவரால் மேலும் ரன்களைக் குவிக்க முடிந்தது.
கெய்லை 18 ரன்களில் வெளியேற்றினார் குல்தீப் யாதவ். இதன்பிறகு லீவிஸின் அதிரடி ஆட்டம் குறையவில்லை. எப்படிப் பந்துவீச்சாலும் அதை சிக்ஸருக்கோ பவுண்டரிக்கோ அனுப்பினார். இதனால் இந்திய பந்துவீச்சாளர்கள் மிகவும் துவண்டு போனார்கள். 12 பந்துகள் வரை அமைதியாக இருந்த சாமுவேல்ஸ் அதன்பிறகு அவரும் இந்தியப் பந்துவீச்சைப் பதம் பார்க்க ஆரம்பித்தார். சமியின் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்தார்.
ஜடேஜா பந்துவீச்சில் அடுத்தடுத்தப் பந்துகளில் சிக்ஸர்கள் அடித்த லீவிஸ் 52 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். கடைசியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 18.3 ஓவர்களில் 194 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லீவிஸ் 125, சாமுவேல்ஸ் 36 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
12 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடித்த லீவிஸ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over

ஆன்மிக தொடரில் களமிறங்கிய பிரியங்கா நல்காரி! போஸ்டர் வெளியானது!

பரதநாட்டிய அபிநயம் செய்த ரிஹானாவின் விடியோ வைரல்! யார் இவர்?
சிரி... சிரி...
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


