காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தலா ஒரு தங்கம், வெள்ளியுடன் இந்தியா பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது.
21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் புதன்கிழமை தொடங்கியது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி உள்பட மொத்தம் 4500 வீரர்கள், வீராங்கனைகள் 11 நாள்கள் நடைபெறும் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
சாதனையுடன் மீராபாய் சானு தங்கம்: பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் உலக சாம்பியன் மீராபாய் சானு புதிய சாதனையுடன் முதல் தங்கத்தை வென்றார். ஸ்நாட்ச் பிரிவில் 86 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 110 கிலோ எடை (மொத்தம் 196 கிலோ) தூக்கி மீராபாய் சானு புதிய காமன்வெல்த் விளையாட்டு சாதனையை நிகழ்த்தினார்.
இதற்கு முன்பு கடந்த 2010-இல் நைஜீரியாவின் அகஸ்டினா 175 கிலோ தூக்கியதே சாதனையாக விளங்கியது. அனைவரின் எதிர்பார்ப்பின் படியே மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் பதக்கம்: இதற்கிடையே வியாழக்கிழமை பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் போட்டிகள் தொடங்கின. இதில் இந்தியாவின் பளு தூக்குதலில் வீராங்கனை மீராபாய் சானு புதிய சாதனையுடன் தங்கமும், கர்நாடகத்தைச் சேர்ந்த வீரர் பி.குருராஜா வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
பளு தூக்குதலில் ஆடவர் 56 கிலோ பிரிவில் இந்தியாவின் பி.குருராஜா 249 கிலோ தூக்கி நாட்டுக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்தார். இப்பிரிவில் மலேசியாவின் முகமது இசார் அகமது (261 கிலோ) தங்கப் பதக்கமும், இலங்கையின் சதுரங்கா லக்மல் (248 கிலோ) வெண்கலப் பதக்கமும் வென்றனர். குருராஜா ஸ்நாட்ச் பிரிவில் 111 கிலோ எடையும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 138 கிலோவும் என மொத்தம் 249 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மற்றொரு போட்டியில் தமிழகத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி ராஜா ஆடவர் 62 கிலோ எடைப்பிரிவில் வெறும் 266 கிலோ மட்டுமே தூக்கி 6-வது இடத்தையே பெற முடிந்தது.
குத்துச்சண்டை: மனோஜ்குமார் வெற்றி:
குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மனோஜ்குமார் தொடக்க ஆட்டத்தில் நைஜீரியாவின் ஓசிட்டா உமேவை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். 13 பேர் அடங்கிய குத்துச்சண்டை அணியில் மனோஜ்குமார் நிச்சயம் பதக்கம் வெல்வார் எனக்கருதப்படுகிறது.
இந்தியாவிடம் வீழ்ந்த பாகிஸ்தான்: மேலும் அணிகள் இடையேயான இரண்டாவது ஆட்டத்திலும் இந்தியா 5-0 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானை அதிரடியாக வீழ்த்தியது.
ஹாக்கியில் இந்தியா தோல்வி: காமன்வெல்த் விளையாட்டு போட்டி பெண்கள் ஹாக்கி துவக்கப் போட்டியில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியிடம் போராடி தோல்வியுற்றது.
ஸ்ரீ காந்த் அபாரம்
பாட்மிண்டன் போட்டி ஆடவர் பிரிவில் உலகின் இரண்டாம் நிலை வீரரும், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீ காந்த் ஒற்றையர் பிரிவில் இலங்கையின் நிலுகா கருரத்னவே 21-16, 21-10 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் இந்தியா 5-0 என்ற செட் கணக்கில் இலங்கியை அதிரடியாக வீழ்த்தியது.
கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் சோப்ரா, ருத்விகா கட்டே இணை 21-15, 19-21, 22-20 என போராடி இலங்கையின் சச்சின் தாஸ், திலினி பிரமோதிகாவை இணையை வென்றது. சாய்னா நேவால் 21-8, 21-4 என்ற புள்ளிக்கணக்கில் மதுஷிகா தில்ருக்ஷியை எளிதாக வென்றார். ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்விக் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை 21-14, 21-17 என்ற செட்கணக்கிலும், பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி இணை 21-12, 21-14 என்ற செட் கணக்கிலும் இலங்கை வீரர்களை வென்றனர்.
டேபிள் டென்னிஸ்
பெண்கள் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் இலங்கையை வென்றது. மணிகா பத்ரா 11-3, 11-5, 11-3 என்ற கணக்கில் எரண்டி வருசவித்னாவையும், சுசித்ரா முகர்ஜி 11-5, 11-8, 11-4 என்ற புள்ளிக்கணக்கில் இஷாராபடுவையும் வென்றனர். இரட்டையர் பிரிவில் சுசித்ரா, பூஜா இணை இலங்கையின் ஹன்சானி-இஷாரா இணையை வீழ்த்தியது.
இந்திய ஒலிம்பிக் சங்கம் பாராட்டு
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குதலில் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் நிர்வாகிகள் நரீந்தர் பத்ரா, ராஜிவ் மேத்தா ஆகியோர் கூறியதாவது:
பளு தூக்குதலில் பதக்கம் வென்ற இருவரையும் பாராட்டுகிறோம். இதன் மூலம் ஏனைய விளையாட்டு வீரர்களுக்கும் பதக்கம் வெல்ல ஊக்கம் கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








