காரணமில்லாமல் என்னை நீக்கியது ஏன்?: ஐபிஎல் ஏலத்தை சென்ற வருடம் வரை நடத்திய ரிச்சர்ட் மேட்லி கேள்வி!
ஐபிஎல் ஏலம் மிகவும் வெளிப்படையாக இருக்கும். அதேபோன்ற ஒரு வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்...


ஐபில் ஏலங்களில் தவறாமல் இடம்பெறுபவர், ரிச்சர்ட் மேட்லி. இதுபோன்ற ஏலங்களை நடத்துவதில் நிபுணத்துவம் பெற்றவரான ரிச்சர்ட் மேட்லியை இந்தமுறை காணமுடியாது.
டிசம்பர் 18 அன்று ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் ஹுயூக் எட்மியாடஸ் ஏலத்தை நடத்தவுள்ளார்.
இந்நிலையில் தன்னைக் காரணமில்லாமல் நீக்கியுள்ளதாக 60 வயது ரிச்சர்ட் மேட்லி பிசிசிஐயைக் குறை கூறியுள்ளார். இதுகுறித்து ஓர் இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
நான் மிகவும் வருத்தத்தில் உள்ளேன். ஐஎம்ஜி நிறுவனத்துடன் இணைந்து பிசிசிஐ இதுபோன்ற ஒரு முடிவை எடுத்துள்ளது. 11 வருடங்களாகத் தொடர்ச்சியாக ஏலம் நடத்தி அணி உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் நன்மதிப்பை நான் பெற்றுள்ளேன்.
புதிய இடம், புதிய நேரங்கள் என ஏலம் தொடர்பாக முற்றிலும் மாற்றம் நடந்துள்ளதால் ஏலம் நடத்துபவரும் புதிதாக இருக்கவேண்டும் என பிசிசிஐ எண்ணுவதாக என்னிடம் சொல்லப்படுகிறது. இதனால் ஏலம் நடத்துபவர் இந்தியராக இருந்தாலும் மாற்றத்தில் ஒரு காரணம் இருக்கும். ஆனால் எனக்குப் பதிலாக இங்கிலாந்தைச் சேர்ந்த, என்னை விடவும் வயதானவராக, என்னை விடவும் பெரிதான, வெள்ளை முடியுள்ள நபரைத் தேர்வு செய்துள்ளார்கள். அவர் எனக்கு நல்ல நண்பர்தாம். ஆனால் அவருக்கு ஐபிஎல் அனுபவம் கிடையாது. என்னைப் போன்ற ஒருவரையே தேர்வு செய்ததில் தர்க்கமே இல்லை. இதுதான் என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது.
ஐபில் ஏலத்தை நடத்தமுடியுமா என்று நவம்பரில் என்னிடம் கேட்கப்பட்டது. பங்கேற்பதை நானும் உறுதி செய்தேன். ஆனால் இரு வாரங்கள் கழித்து, பிசிசிஐ/ஐஎம்ஜியிடமிருந்து எனக்கு வந்த மின்னஞ்சலில், உங்கள் சேவை எங்களுக்குத் தேவையில்லை. ஏலம் நடத்துவதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதில் எழுதப்பட்டிருந்தது. என்னை நீக்கியதற்கு எந்த விளக்கமும் இல்லை, 11 வருடச் சேவைக்கான நன்றி இல்லை. நான் அதிர்ச்சியடைந்தேன்.
நீக்கியதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நான் என்ன தவறு செய்தேன், எங்கு எல்லை மீறினேன் என்பதைச் சொன்னால் எனக்கு நிம்மதியாக இருக்கும். உண்மையை அறிந்துகொள்ள விரும்புகிறேன். நான் தான் நீக்கினேன், இந்தக் காரணத்துக்காகத்தான் நீக்கினேன் என யாரும் காரணத்தைச் சொல்ல முன்வரவில்லை.
ஐபிஎல் ஏலம் என்பது வீரர்களை விற்பது மட்டுமல்ல, போட்டி தொடங்குவதற்கான அருமையான தொடக்கம். 11 வருடங்களாக ஐபிஎல் ஏலத்தில் உழைத்தவரை ஏன் மாற்றுகிறீர்கள்? ஐபிஎல் ஏலம் மிகவும் வெளிப்படையாக இருக்கும். அதேபோன்ற ஒரு வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...