பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

ரபாடா மீது நடுவர்கள் புகார்! டெஸ்ட் தொடரில் ஆட தடை விதிக்கப்படுமா?

2-வது டெஸ்டில் ஆஸி. கேப்டன் ஸ்மித் தோள்பட்டையில் இடித்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா மீது நடுவர்கள் புகார் அளித்துள்ளார்கள்...

News image
Updated On :10 மார்ச் 2018, 10:19 am

எழில்

2-வது டெஸ்டில் ஆஸி. கேப்டன் ஸ்மித் தோள்பட்டையில் இடித்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா மீது நடுவர்கள் புகார் அளித்துள்ளார்கள். இதையடுத்து டெஸ்ட் தொடரில் முழுமையாகப் பங்கேற்கும் வாய்ப்பை அவர் இழக்கவுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் அந்நாட்டுக்கு அணிக்கு எதிராக 5-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா விளையாடியது. இந்த ஆட்டத்தில் 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவனை ஆட்டமிழக்கச் செய்ததை அடுத்து, அவரைப் பார்த்து தீவிரமாக சைகை செய்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவுக்கு ஐசிசி அபராதம் விதித்தது. அவரது ஒரு நாள் ஆட்ட ஊதியத்தில் 15 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று ஐசிசி உத்தரவிட்டது. அத்துடன், அபராத புள்ளி ஒன்றும் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் ரபாடாவின் செயல்பாட்டுக்கு எதிராக ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது முதல் தற்போதைய டெஸ்ட் தொடருக்கு முன்பு வரை 5 அபராதப் புள்ளிகளை அவர் பெற்றுள்ளார்.

இதையடுத்து அடுத்த 24 மாதங்களுக்குள் அவர் 8 அல்லது அதற்கு அதிகமான அபராதப் புள்ளிகளை பெற்றால் அவர் அந்த சமயத்தில் விளையாட உள்ள கிரிக்கெட் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவார் என்று ஐசிசி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளார் ரபாடா. நேற்று ஸ்மித்தை வீழ்த்திய ரபாடா, அடுத்தக் கணம் அவருடைய தோள்பட்டையில் இடித்தபடி ஓடினார். இதையடுத்து ஆட்ட நடுவர்கள் தர்மசேனா மற்றும் கஃபானே ஆகியோர் அவர் மீது ஐசிசி ஆட்ட நடுவரிடம் புகார் அளித்துள்ளார்கள். ஐசிசி இதை ஏற்றுக்கொண்டு விட்டால் ரபாடா எப்படியும் மூன்று அபராதப் புள்ளிகளைப் பெறுவார். இதையடுத்து 8 அபராதப் புள்ளிகளுடன் அவர் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட வாய்ப்புண்டு. இதனால் இந்த டெஸ்ட் தொடரில் மீதமுள்ள இரு டெஸ்டுகளிலும் விளையாடாமல் போகும் அபாயத்தைச் சந்திக்கவுள்ளார் ரபாடா.

எனினும் ரபாடாவுக்கு அபாரதமும் அபராதப் புள்ளிகளும் விதிக்கப்பட்டால் அதை எதிர்த்து முறையிட தென் ஆப்பிரிக்க அணி முடிவு செய்துள்ளது. ஸ்மித் மீது எதிர்பாராதவிதமாக மோதியதால் அதற்குத் தண்டனை வழங்கப்படக்கூடாது என்று தென் ஆப்பிரிக்க அணி முறையிடவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.