6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்தார் ஸ்மித்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்ததுடன், தன்னை

News image

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேட்டியளித்த அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித்தின் பல்வேறு தோற்றங்கள்.

Updated On :29 மார்ச் 2018, 7:33 pm

வார்னர், பான்கிராஃப்டும் மன்னிப்பு கோரினர்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்ததுடன், தன்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆஸ்திரேலியாவின துணை கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய டேவிட் வார்னர், பந்தை சேதப்படுத்த முயன்ற அந்த அணியின் வீரர் பான்கிராஃப்ட் ஆகியோரும் மன்னிப்பு கேட்டனர்.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து தாய் நாடு திரும்பிய 28 வயது ஸ்மித், சிட்னி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது:
நான் மிகப் பெரிய தவறை இழைத்துவிட்டேன் என்பதை புரிந்துகொண்டு விட்டேன். என்னுடைய தலைமைக்கு கிடைத்த தோல்வியாகவே இதைக் கருதுகிறேன். பந்தை சேதப்படுத்த முயன்ற செயலுக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நான் முழு பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். இதுபோன்ற தவறு இனி நிகழாமல் இருக்க நான் மற்ற வீரர்களுக்கு ஒரு பாடமாக இருப்பேன் என்று கருதுகிறேன் என்றார்.
எனக்கான மரியாதையை நான் மீண்டும் மீட்டெடுப்பேன் என்று நம்புகிறேன். மிகச் சிறந்த விளையாட்டு கிரிக்கெட். அதுதான் எனது வாழ்க்கை. அதன் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்காக வருந்துகிறேன். இதுபோன்று இனி ஒருபோதும் நடக்காது. என்னை மன்னித்து விடுங்கள். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்றார் ஸ்மித்.
ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி வசமானது.
இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய 3-ஆவது டெஸ்ட் ஆட்டத்தின்போது சொரசொரப்பு தன்மைகொண்ட ஒரு பொருளைக் கொண்டு பந்தை சேதப்படுத்த பான்கிராஃப்ட் முயன்றது கேமராவில் பதிவாகி மைதானத்தில் ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த திரையில் ஒளிபரப்பானது. இதையடுத்து, அந்தப் பொருளை பார்கிராப்ட் தனது உடையில் மறைக்க முயன்றார். பின்னர், இந்தக் குற்றச்சாட்டை ஸ்மித்தும், பான்கிராஃப்டும் ஒப்புக் கொண்டனர்.
அத்துடன், கேப்டன் மற்றும் துணைக் கேப்டன் பொறுப்பிலிருந்து முறையே ஸ்மித் மற்றும் வார்னர் விலகுவதாக அறிவித்தனர். கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று பலத்த எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் வலியுறுத்தினார். இதை விசாரித்து வந்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம், ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டும், பான்கிராஃப்டுக்கு 9 மாத காலமும் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் வெள்ளிக்கிழமை அந்நாட்டு அணிக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் விளையாடவுள்ளது ஆஸ்திரேலியா.


கிரிக்கெட்டை களங்கப்படுத்திவிட்டேன்

Story image

நான் மிகவும் நேசித்த கிரிக்கெட்டை களங்கப்படுத்தி விட்டேன் என்றுஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தெரிவித்தார்.இதுகுறித்து முகநூலில் அவர் 
வெளியிட்ட பதிவில், 'நான் கிரிக்கெட்டை இளமைக் காலம் முதலே மிகவும் நேசித்து வருகிறேன். அந்த விளையாட்டுக்கு 
களங்கத்தை ஏற்படுத்தி விட்டேன். இதற்காக நான் வருந்துகிறேன். என்னுடைய குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க விரும்புகிறேன்' என்றார்.

பொறுப்பிலிருந்து விலகுவேன்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எஞ்சியுள்ள ஒரு டெஸ்ட் ஆட்டம் முடிவடைந்த பிறகு ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகி விடுவேன் என்று கலங்கிய கண்களுடன் டேரன் லேமன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்கில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், 'ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு இந்தத் தொடரே எனது கடைசி தொடராக இருக்கும். ஸ்டீவ் ஸ்மித்துக்காக மிகவும் வருந்துகிறேன். அணியின் வீரர்கள் அனைவரும் மிகவும் மனச் சோர்வுடன் உள்ளனர். எனது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த பிறகே எனது பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்தேன். இதன்மூலம், கிரிக்கெட் ஆஸ்திரேலியா சில மாற்றங்களை செய்து பொதுமக்களிடம் நற்பெயரை பெற ஒரு வாய்ப்பாக இருக்கும்' என்றார்.

ஸ்பான்சர்ஷிப்பை விலக்கிக் கொண்ட மெக்கெல்லன்
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முன்னணி ஸ்பான்சர்ஷிப் நிறுவனமான மெக்கெல்லன், தனது ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடருக்கும் மாகெல்லன் நிறுவனம்தான் கடந்த ஆண்டில் ஸ்பான்சர் செய்தது. அதேநேரத்தில், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகிய வீரர்களுடன் செய்துகொண்டிருந்த ஒப்பந்தத்தை 'ஆஸிக்ஸ்' நிறுவனம் முடித்துக் கொண்டது.பந்தின் தன்மையை மாற்ற முயன்றதால் இந்த நடவடிக்கையை இந்த நிறுவனங்கள் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

மன்னித்துவிடுங்கள்: 
பான்கிராஃப்ட்பந்தை சேதப்படுத்த முயன்றபோது கேமரா கண்களில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட், தனது செயலுக்காக மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டார்.அந்த அணியின் தொடக்க 
ஆட்டக்காரர்களில் ஒருவரான அவர், 'என்னை மன்னித்து விடுங்கள். எனது செயல்களுக்காக நான் வருந்துகிறேன். எஞ்சியுள்ள காலமும் எனது செயலை நினைத்து நான் வருந்துவேன்' என்றார்.

ரோஹித் கருத்து
ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், 'விமான நிலையத்தில் ஸ்மித்துக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்ததும், அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் என்னை அதிர்ச்சி அடையச் செய்தன. செய்த தவறை அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டனர். அவர்களிடம் பல கேள்விகளை கேட்பது அழகல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே சுட்டுரையில் ஒரு விடியோவை வெளியிட்டிருந்தார்.
அதில், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் விமான நிலையத்தில் ஸ்மித் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட காட்சி இடம்பெற்றிருந்தது. அந்தப் பதிவில், 'இது அவமானகரமானது. ஸ்மித் குற்றவாளியல்ல' என்று வார்னே குறிப்பிட்டுள்ளார்.

நடத்தை விதிகளில் திருத்தம்? ஐசிசி விளக்கம்
ஐசிசி நடத்தை விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.
பந்தை சேதப்படுத்த முயன்ற விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் சர்ச்சையில் சிக்கியிருக்கும் நிலையில், ஐசிசி விதிகளில் மாற்றம் செய்யப்படுமா? என்று பல்வேறு ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்த விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான டேவிட் ரிச்சர்ட்சன் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறினார்.
மஞ்சள், சிவப்பு நிற அட்டை பயன்படுத்தப்படுமா?
'நடத்தை விதிகளை மீறும் வீரர்களை எச்சரிப்பதற்காகவும், ஆடுகளத்தை விட்டு வெளியேற்றுவதற்காகவும் முறையே மஞ்சள் மற்றும் சிவப்பு நிற அட்டைகளை கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்துவது குறித்து எதிர்காலத்தில் ஆலோசனை நடத்தப்படலாம். ஆனால், என்னை பொறுத்தவரை அந்த நடைமுறை கிரிக்கெட்டுக்கு ஒத்துவராது என்று கருதுகிறேன்' என்றார் டேவிட் ரிச்சர்ட்சன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.