
2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள் பந்துவீச முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தரப்பில் துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே அதிகபட்சமாக 10 பவுண்டரியுடன் 163 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா தனது 11-ஆவது டெஸ்ட் அரைசதத்தை பிரம்மாண்ட சிக்ஸர் மூலம் பதிவு செய்தார். 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் விளாசினார். ராகுல் 44, ஹனுமா விஹாரி 32 ரன்கள் சேர்த்தனர்.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 96.4 ஓவர்களில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மே.இ.தீவுகள் தரப்பில் அபாரமாக பந்துவீசி கெமர் ரோச் 4-66, கேப்ரியல் 3-71 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மே.இ.தீவுகள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. பிராத்வெயிட் 14, ஜான் கேம்பல் 23, ஷம்ரா புருக்ஸ் 11, பிராவோ 18 ரன்களுடன் வெளியேறினார்.
2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 59 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 48 ரன்களும், ஹெத்மேயர் 35 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய இஷாந்த் ஷர்மா 5-42 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பும்ரா, ஷமி, ஜடேஜா தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இந்திய அணியை விட மே.இ.தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் இன்னும் 108 ரன்கள் பின்தங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.