அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அஸ்வின் அணி போட்டியிலிருந்து வெளியேற்றம்: அசத்திய ஷுப்மன் கில், மயங்க் அகர்வால் & ஜலஜ் சக்ஸேனா!

தியோதர் கோப்பைக்கான ஆட்டத்தில் இந்தியா சி அணியுடன் 232 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஆர். அஸ்வினின் இந்தியா ஏ அணி, அடுத்தடுத்த தோல்விகளையடுத்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2019, 11:21 am

எழில்

தியோதர் கோப்பைக்கான ஆட்டத்தில் இந்தியா சி அணியுடன் 232 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஆர். அஸ்வினின் இந்தியா ஏ அணி, அடுத்தடுத்த தோல்விகளையடுத்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

இந்தியா ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா சி அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ஷுப்மன் கில்லும் மயங்க் அகர்வாலும் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடினார்கள். முதல் 10 ஓவர்களில் 44 ரன்கள் கிடைத்தன. மயங்க் 48 பந்துகளிலும் ஷுப்மன் கில் 74 பந்துகளிலும் அரை சதங்களை எட்டினார்கள். அஸ்வின் உள்ளிட்ட இந்தியா ஏ பந்துவீச்சாளர்களை இருவரும் சுலபமாகக் கையாண்டார்கள். 25 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 140 ரன்கள் கிடைத்தன. 35-வது ஓவரில் மயங்க் - ஷுப்மன் கூட்டணி 200 ரன்களை எட்டியது. 96 பந்துகளில் சதமடித்த மயங்க் அகர்வால் பிறகு 120 ரன்களில் விஹாரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அடுத்ததாக, 123 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார் ஷுப்மன் கில். பிகே கர்க், 16 ரன்களில் ஆட்டமிழந்தார். சதமடித்த பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஷுப்மன் கில். சிக்ஸர் மழை பொழிந்தார். பிறகு, அஸ்வின் பந்துவீச்சில் 143 ரன்களில் ஆட்டமிழந்தார். அதுவரை நிதானமாக ஆடி வந்த சூர்யகுமார் யாதவ், கடைசி 3 ஓவர்களில் எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். முதல் 15 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ், கடைசி 14 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் இந்தியா சி அணிக்குக் கடைசி 3 ஓவர்களில் 61 ரன்கள் கிடைத்தன. 48-வது ஓவரில் 16 ரன்களும் 49-வது ஓவரில் 22 ரன்களும் 50-வது ஓவரில் 23 ரன்களும் கிடைத்தன. கடைசி 3 ஓவர்களில் சூர்யகுமார் யாதவ், 4 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடித்தார். 

இந்தியா சி அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா ஏ அணியின் உனாட்கட் 10 ஓவர்களில் 82 ரன்களும் கெளல் 8 ஓவர்களில் 66 ரன்களும் கொடுத்தார்கள். 

மிகப்பெரிய இலக்கை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது இந்தியா ஏ அணி. ஒரு பேட்ஸ்மேனாலும் அரை சதம் கூட எடுக்கமுடியவில்லை. தேவ்தத் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். 32 வயது சுழற்பந்துவீச்சாளர் ஜலஜ் சக்ஸேனா அபாரமாகப் பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியா ஏ அணி, 29.5 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 232 ரன்கள் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தை வென்றது இந்தியா சி அணி. 

நேற்று, இந்தியா பி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 108 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா ஏ அணி. இன்றைய ஆட்டத்திலும் தோற்றதால் அந்த அணி போட்டியை விட்டு வெளியேறியுள்ளது. நாளை இந்தியா பி - இந்தியா சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் எந்த அணி வென்றாலும் திங்களன்று நடைபெறவுள்ள தியோதர் கோப்பைக்கான இறுதிச்சுற்றில் இந்தியா பி - இந்தியா சி ஆகிய அணிகளே மோதவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.