டி20 உலகக் கோப்பை: மேலும் இரு அணிகள் தகுதி!

நெதர்லாந்து, நமிபியா ஆகிய இரு அணிகளும் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன. 
வெற்றியைக் கொண்டாடும் நமிபியா அணி.
வெற்றியைக் கொண்டாடும் நமிபியா அணி.
Updated on
1 min read

அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் விளையாடி இதுவரை நான்கு அணிகள் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன.

டி20 உலகக் கோப்பையில் 16 அணிகள் பங்கேற்கின்றன. டி20 தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிட்ட நிலையில் மீதமுள்ள ஆறு இடங்களுக்கான தகுதிச்சுற்றுப் போட்டி துபை மற்றும் அபு தாபியில் தற்போது நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்றுப் போட்டியில் 14 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. லீக் சுற்றுகளின் முடிவுகளில் இரு பிரிவுகளிலும் முதலிடம் வகிக்கும் அணிகள் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும். அதன் அடிப்படையில் குரூப் ஏ பிரிவில் பப்புவா நியூ கினி அணி விளையாடிய 6 ஆட்டங்களில் 5-ல் வென்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. அதேபோல அயர்லாந்து அணி, குரூப் பி பிரிவில் 6 ஆட்டங்களில் 4-ல் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. இதன் அடிப்படையில் பப்புவா நியூ கினி, அயர்லாந்து ஆகிய இரு அணிகளும் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றன. 

இந்நிலையில் தற்போது நெதர்லாந்து, நமிபியா ஆகிய இரு அணிகளும் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன. 

நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து. 2014, 2016 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்ற நெதர்லாந்து அணி, 3-வது முறையாக டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. 

மற்றொரு ஆட்டத்தில் ஓமன் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நமிபியா. இதன்மூலம் முதல்முறையாக டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு நமிபியா அணி தகுதி பெற்றுள்ளது. அந்த அணி இதற்கு முன்பு 2003-ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்றது. 

இன்று இரு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஸ்காட்லாந்து - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஹாங்காங் - ஓமன் என இவ்விரு ஆட்டங்களிலும் வெற்றி பெறும் அணிகள் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும் கடைசி இரு அணிகளாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com