வெற்றிப் பாதையில் இங்கிலாந்து? மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 382 ரன்கள் முன்னிலை

ஆஸ்திரேலியாவுடனான கடைசி ஆஷஸ் டெஸ்டின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றிப் பாதையில் உள்ளது. 
புகைப்படம்: ஐசிசி டிவிட்டர்
புகைப்படம்: ஐசிசி டிவிட்டர்


ஆஸ்திரேலியாவுடனான கடைசி ஆஷஸ் டெஸ்டின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றிப் பாதையில் உள்ளது. 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கடைசி ஆஷஸ் டெஸ்ட் ஆட்டம் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 294 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, 69 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்நிலையில், தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் ஜோ டென்லி இன்று (சனிக்கிழமை) 3-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கினார். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ரோரி பர்ன்ஸ் 20 ரன்களுக்கு லயான் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஜோ ரூட்டும் 21 ரன்களுக்கு லயான் சுழலில் சிக்கினார். 

இங்கிலாந்தை மீட்ட இணை:

இதன்பிறகு, ஜோ டென்லியுடன் பென் ஸ்டோக்ஸ் இணைந்தார். இந்த இணை தொடக்கத்தில் படுநிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இணையில் முதலில் டென்லி அரைசதத்தைக் கடந்தார். அவருக்குப் பிறகு ஸ்டோக்ஸும் அரைசதத்தை எட்டினார். இதன்பிறகு ஒரு கட்டத்தில் ரன் வேகத்தை சற்று துரிதப்படுத்தினர். இதனால், இங்கிலாந்து அணியின் முன்னிலையும் 250 ரன்களைக் கடக்க ஆஸ்திரேலியா திணறியது.

இந்நிலையில், 67 ரன்கள் எடுத்திருந்த ஸ்டோக்ஸ் லயானின் அற்புதமான பந்தில் போல்டானார். டென்லி, ஸ்டோக்ஸ் இணை 3-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது. இதன்பிறகு, சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டென்லியும் துரதிருஷ்டவசமாக 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு மீண்டும் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. பேர்ஸ்டோவ் 14, கரண் 17, வோக்ஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸைப் போல் பின்வரிசையில் நம்பிக்கையளித்து வந்த பட்லரும் வோக்ஸ் ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், இங்கிலாந்து அணி 305 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. 

இதையடுத்து, ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேக் லீச் 3-வது நாள் ஆட்டநேரம் முடியும் வரை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம், அந்த அணியின் முன்னிலை 382 ரன்களாக உள்ளது. 

இந்த ஆட்டத்தில் இன்னும் 2 முழு நாட்கள் மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து அணி 400 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்தால், அது ஆஸ்திரேலிய அணிக்கு கடுமையான சவாலாக இருக்கும். மேலும், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால், இங்கிலாந்து அணி ஆஷஸை இழந்தாலும் தொடரையாவது சமன் செய்யலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com