மீண்டும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆனார் ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி வரும் 2021 வரை மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜாம்பவான் கபில்தேவ்
சிஏசி உறுப்பினர்கள் அன்ஷுமன் கெய்க்வாட், கபில் தேவ், சாந்தா ரங்கசாமி.
சிஏசி உறுப்பினர்கள் அன்ஷுமன் கெய்க்வாட், கபில் தேவ், சாந்தா ரங்கசாமி.


இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி வரும் 2021 வரை மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜாம்பவான் கபில்தேவ் தலைமையிலான சிஏசி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நேர்காணலில் ரவிசாஸ்திரியை மீண்டும் பயிற்சியாளராக தேர்வு செய்தது.
கடந்த உலகக் கோப்பையுடன் ரவிசாஸ்திரி மற்றும் சக பயிற்சியாளர்கள் பணிக்காலம் முடிவுற்றது. எனினும் மே.இ.தீவுகள் தொடர் நடந்து வருவதால், ரவிசாஸ்திரி மற்றும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்களுக்கு 45 நாள்கள் நீட்டிப்பு தரப்பட்டுள்ளது.


புதிய தலைமை பயிற்சியாளர், இதர பயிற்சியாளர்களை நியமிக்க பிசிசிஐ சிஓஏ அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 30-ஆம் தேதி  இறுதி நாளாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்ய ஜாம்பவான் கபில்தேவ், முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட், மகளிரணி முன்னாள் கேப்டன் சாந்தா ஆகியோர் கொண்ட சிஏசிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதற்கான நேர்காணல் வரும் 16 தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
புதிய பயிற்சியாளர் தேர்வின் போது ரவிசாஸ்திரி நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ள வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து லால்சந்த் ராஜ்புத், ராபின் சிங், வெளிநாட்டைச் சேர்ந்த டாம் மூடி  (ஆஸி), மைக் ஹெஸ்ஸன் (நியூஸி), பில் சிம்மன்ஸ் (மே.இ,தீவுகள்) ஆகியோர் இதற்கு விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) நேர்காணலை நடத்தியது. 
பில் சிம்மன்ஸ் விலகல்: மே.இ.தீவுகள் முன்னாள் தொடக்க வீரர் பில் சிம்மன்ஸ் தனிப்பட்ட காரணங்களால் நேர்காணலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
இதையடுத்து சாஸ்திரி, ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத், டாம் மூடி, மைக் ஹெஸ்ஸன் ஆகியோர் பயிற்சியாளருக்கான பந்தயத்தில் இருந்தனர்.
நேர்காணலுக்கு பின் கபில் தேவ் கூறியதாவது:
சாஸ்திரியின் சாதனைகள் அதிகம்: பயிற்சியாளருக்கான போட்டியில் சாஸ்திரி முதலிடத்திலும், மைக் ஹெஸ்ஸன் இரண்டாவது இடத்திலும், டாம் மூடி மூன்றாவது இடத்திலும் இருந்தனர். ஏனைய பயிற்சியாளர்களை ஒப்பிடும் போது, சாஸ்திரியின் பயிற்சியில் இந்தியா பல்வேறு சிகரங்களை அடைந்தது.
குறிப்பாக 71 ஆண்டுகளில் முதன்முறையாக ஆஸி.யில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் அந்தஸ்தைப் பெற்றது.
எனினும் 2015, 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறி தோல்வியைத் தழுவியது. 
சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் 21 டெஸ்ட்களில் 13-இலும், 60 ஒருநாள் ஆட்டங்களில் 43-இலும், 36 டி20 ஆட்டங்களில் 25-இலும் இந்தியா வென்றுள்ளது என்றார் கபில்தேவ்.
2021 வரை பதவிக்காலம்: மே.இ.தீவுகள் தொடருக்கு செல்லும் முன்பே பயிற்சியாளராக ரவிசாஸ்திரியே தொடர விரும்புவதாக கேப்டன் கோலி அழுத்தமாக கூறியிருந்தார். கேப்டன் கருத்துக்கும் மதிப்பு தரப்படும் என கபில்தேவ் கூறியிருந்தார். வரும் 2021 டி20 உலகக் கோப்பை போட்டி வரை சாஸ்திரி பதவி வகிப்பார்.  
ஏற்கெனவே 2007 வங்கதேச தொடரில் இந்திய அணியின் மேலாளர், 2014-16-இல் அணி இயக்குநர், 2017-19-தலைமை பயிற்சியாளர் பதவிகளை வகித்தவர் சாஸ்திரி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com