பயிற்சி ஆட்டம் டிரா: அரை சதமெடுத்த ரஹானே, விஹாரி!
By எழில் | Published On : 20th August 2019 11:02 AM | Last Updated : 20th August 2019 11:02 AM | அ+அ அ- |

ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்கவுள்ள டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது. கூலிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற 3 நாள்கள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 297/5 ரன்களை எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மே.இ.தீவுகள் ஏ அணி 56.1 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் கவம் ஹாட்ஜ் 51, ஜஹ்மர் ஹாமில்டன் 33 ஆகியோர் மட்டுமே ஒரளவு ரன்களை சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இஷாந்த் சர்மா 3-21, உமேஷ் யாதவ் 3-19, குல்தீப் யாதவ் 3-35 ஆகியோர் அபாரமாகப் பந்துவீசி மே.இ.தீவுகள் ஏ அணியை நிலைகுலையச் செய்தனர்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 35 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 84 ரன்களை எடுத்தது. இந்நிலையில் கடைசி நாளன்று, இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை 78 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ரஹானே அரை சதமெடுத்தார். விஹாரியும் 64 ரன்கள் எடுத்து இந்த ஆட்டத்தை நன்குப் பயன்படுத்திக்கொண்டார்.
இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு 305 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி, 21 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிரா செய்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...