உலகக் கோப்பைக்கு இதுதான் சிறந்த பயிற்சிக்களம்: நியூஸி. தொடர் குறித்து விராட் கோலி பேட்டி

நியூஸிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. 
உலகக் கோப்பைக்கு இதுதான் சிறந்த பயிற்சிக்களம்: நியூஸி. தொடர் குறித்து விராட் கோலி பேட்டி

நியூஸிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் புதன்கிழமை (ஜன. 23) நடைபெறவுள்ளது.  இதுகுறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

உலகக் கோப்பை நெருங்கி வரும் சூழலில் ஒரு அணியாக இணைந்து செயல்படுவது மிகவும் முக்கியமானது. எனவே அதற்கு தயாராகும் விதமாக ஒரு சில வீரர்களை, ஒரு சில இடங்களிலும், சூழலிலும் களமிறக்கி சோதனை செய்ய இதுவே சரியான தருணம். எனவே இதுபோன்ற சோதனை முயற்சிகளின் போது மனதளவில் சற்று வளைந்து கொடுத்துச் செல்வது நல்லது. உலகக் கோப்பைக்கு இதுதான் சிறந்த பயிற்சிக்களம்.

300-க்கும் அதிகமான இலக்குகளை எதிரணி நிர்ணயித்தாலும் கூட அச்சப்படாமல் இருப்பது மிகவும் நல்லது. அதுபோன்ற சூழ்நிலையில், அணியின் ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் தங்களின் மீது நம்பிக்கை வைத்து, ஒன்றுபட்டு செயல்படுவது சிறப்பாக அமைந்து வெற்றியை பெற்றுத்தரும். ஆஸ்திரேலியாவில் செயல்படுத்திய அதே திட்டங்களை தான் இங்கும் செயல்படுத்த உள்ளோம். 

தன்னம்பிக்கையுடன் களமிறங்கி ஒரு அணியாக சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வெற்றிபெறுவது மட்டுமே எங்கள் நோக்கமாக உள்ளது. நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ரக போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே தான் அவர் அணியை திறம்பட வழிநடத்துகிறார். 

ஒருநாள் போட்டிகளில் குறிப்பாக கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோர் தான் நியூஸிலாந்து அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளனர். அதையொட்டி தான் இதர வீரர்களின் ஆட்டம் அமைகிறது. எனவே அதற்கான செயல்திட்டத்தை நாங்கள் ஏற்படுத்த வேண்டும்.

சொந்த நாட்டில் நியூஸிலாந்து அணி மிகவும் சிறப்பாக செயல்படக்கூடியது. எனவே அவர்களை இங்கு வெல்வது மிகவும் கடினமாகும். இருப்பினும் இந்த சவாலை இந்திய அணி எதிர்கொள்ளும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com