நாங்கள் மே 22-ஆம் தேதி புறப்படும் போது தான் 15 பேர் யார்-யார்? என்று தெரியும்: ரவி சாஸ்திரி

இந்திய அணி போதிய பலத்துடன் உலகக் கோப்பைத் தொடரில் களமிறங்குவதாக தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் மே 22-ஆம் தேதி புறப்படும் போது தான் 15 பேர் யார்-யார்? என்று தெரியும்: ரவி சாஸ்திரி

இந்திய அணி போதிய பலத்துடன் உலகக் கோப்பைத் தொடரில் களமிறங்குவதாக தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி சமபலத்துடன் உள்ளது. 4-ஆம் நிலையில் களமிறங்க போதிய வீரர்கள் தயாராக இருக்கின்றனர். எனவே அதுகுறித்து எனக்கு கவலையில்லை. அணியின் அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. எனவே 15 வீரர்களும் எந்த சமயத்திலும், எந்த நிலையிலும் களமிறங்க தயார் நிலையில் உள்ளனர்.

ஒருவேளை ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு காயம் ஏற்பட்டால் கூட மாற்று வீரர் தயாராக இருக்கிறார். எனக்கு ஐபிஎல் தொடரில் குல்தீப் யாதவ் எவ்வாறு செயல்பட்டார் என்று கவலையில்லை. ஏனென்றால் நான் இம்முறை ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலும் ஒதுங்கியிருந்தேன்.   

கேதர் ஜாதவுக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. எனவே பொறுத்திருந்து பார்ப்போம். அவரது உடல்தகுதி குறித்து சோதிக்க இன்னும் நிறைய நேரம் உள்ளது. நாங்கள் மே 22-ஆம் தேதி உலகக் கோப்பைக்கு புறப்பட விமானம் ஏறும்போதுதான் அணியில் உள்ள 15 பேர் யார்-யார்? என்று தெரியவரும். எனவே அதனை அப்போது பார்த்துக்கொள்ளலாம். 

உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டித் தொடர்களின் போது அந்தந்த சமயத்தில் எடுக்கும் முடிவே முக்கியமானது. அப்போது ஏற்படும் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு உலகக் கோப்பைக்கு இடையே உள்ள 4 ஆண்டுகளும் முக்கிய காலகட்டம் தான். அது தான் ஒரு அணியை தயார்படுத்த சரியான பயிற்சிக்களமாகும்.

இம்முறை ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய அணிகள் மிகப்பெரிய சவால் அளிக்கக்கூடிய அணிகளாக அமையும். கடந்த முறை இந்தியாவுடனான தொடரின் போதே மே.இ.தீவுகள் மிகச்சிறந்த அணி என்று நான் தெரிவித்திருந்தேன். நல்லவேளையாக அப்போது கெயில், ரசல் போன்ற வீரர்கள் மே.இ.தீவுகள் அணியில் இடம்பெறவில்லை. ஆனால், இம்முறை காட்சி வேறானது. அந்த அணி முழுக்க பலம் நிறைந்த வீரர்களால் நிரம்பியுள்ளது.

அதுபோன்று கடந்த 25 ஆண்டுகளில் இதர அணிகளை விட ஆஸ்திரேலிய அணிதான் அதிக உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. அதிலும் இம்முறை சாம்பியன் அணியாகவே களமிறங்குகிறது. இந்த அணியும் சவால் நிறைந்த அணியாகவே உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மிகச்சிறந்த திறன்களை உடையவர்கள் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com