இதுதான் பகலிரவு டெஸ்ட்டுக்கான திட்டம்: கபில் தேவ், அசாருதின், சச்சின், டிராவிட் என பல ஜாம்பவான்கள் வருகை!

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இதுதான் பகலிரவு டெஸ்ட்டுக்கான திட்டம்: கபில் தேவ், அசாருதின், சச்சின், டிராவிட் என பல ஜாம்பவான்கள் வருகை!


பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக நடைபெறவுள்ள இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டத்துக்கு சச்சின், டிராவிட், கபில் தேவ், அசாருதின், கும்ப்ளே என பல ஜாம்பவான்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாகும். எனவே, இதை கோலாகலமாகக் கொண்டாடுவதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக பகலிரவு டெஸ்ட் ஆட்டம் சுமார் இரவு 10 மணி வரை நடைபெறும். ஆனால், இந்தியாவில் தற்போது குளிர்காலம் என்பதால் அதைக் கருத்தில் கொண்டு 8 மணிக்கு ஆட்டம் முடியும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்தை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என மேற்கு வங்க கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆட்டத்தின் உணவு இடைவேளை 30 நிமிடங்கள் ஆகும். தேநீர் இடைவேளை 20 நிமிடங்கள் ஆகும்.

உணவு இடைவேளையில், இந்தியாவின் தலைசிறந்த ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் கலந்துரையாடவுள்ளனர். இவர்கள் தவிர எஸ் ரமேஷ், சபா கரிம், சுனில் ஜோஷி, அஜித் அகார்கர், வெங்கடேஷ் பிரசாத், கபில் தேவ், திலிப் வெங்கசர்கார், முகமது அசாருதின், கிரிஷ் ஸ்ரீகாந்த், ஃபரூக் இன்ஜினியர் மற்றும் சந்துரு போர்டே ஆகிய முன்னாள் இந்திய வீரர்களும் இந்த ஆட்டத்தைக் காண வருகை தரவுள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் தவிர அபினவ் பிந்த்ரா, பி கோபிசந்த், பிவி சிந்து, சானியா மிர்சா மற்றும் மேரி கோம் ஆகிய மற்ற விளையாட்டு வீரர்களும் ஈடன் கார்டன்ஸ் மைதானத்துக்கு வரவுள்ளனர். செஸ் ஜாம்பவான்கள் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் மேக்னஸ் கார்ல்ஸன் ஆகியோரால் இதில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் நைமூர் ரஹ்மான், முகமது மஹ்முதுல் ஹாசன், மஹ்ரப் ஹோசைன், முகமது ஹசிபுல் ஹோசைன், ஷாரியர் ஹோசைன் பிட்டுட், காஸி ஹபிபுல் பஷர் மற்றும் முகமது அக்ரம் கான் ஆகிய முன்னாள் வங்கதேச கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்கிறார்கள்.

தேநீர் இடைவேளையின்போது முன்னாள் கேப்டன்கள் கௌரவிக்கப்படவுள்ளார்கள். இதையடுத்து, முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தபிறகு, பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, டாஸ் போடும் சமயத்தில், ராணுவ பாராசூட் வீரர்கள் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தரையிறங்கி இருநாட்டு கேப்டன்களிடம் பிங்க் நிற பந்தை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணம் கருதி கடைசி நேரத்தில் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com