கோலி, புஜாரா அரைசதம்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா முன்னிலை!

வங்கதேசத்துடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்துள்ளது.
புகைப்படம்: டிவிட்டர் | ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர் | ஐசிசி


வங்கதேசத்துடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பிங்க் நிற பந்தில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார் இஷாந்த்: 106 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்!

இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையில் 1 விக்கெட்டை இழந்து 35 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பிறகு, ரோஹித் சர்மாவும், சேத்தேஷ்வர் புஜாராவும் 3-வது செஷனைத் தொடங்கினர். இதில் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா 21 ரன்களுக்கு எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.


தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி வந்த வேகத்தில் பவுண்டரிகளாக ரன் குவித்தாலும், அதன்பிறகு நிதானத்தைக் காட்டத் தொடங்கினார். இந்த இணை இந்திய அணியின் இன்னிங்ஸைக் கட்டமைத்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்நிலையில், புஜாரா அரைசதத்தை எட்டினார். இதன்மூலம், பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெற்றார். இருந்தபோதிலும், அவர் அரைசதம் அடித்தவுடன் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதைத்தொடர்ந்து, கேப்டன் கோலியுடன் துணை கேப்டன் ரஹானே இணைந்தார். இதனிடையே, விராட் கோலியும் தனது அரைசதத்தை எட்டினார்.

இதையடுத்து, ரஹானே தனது இன்னிங்ஸை சற்று துரிதமான ஆட்டம் மூலம் தொடங்கினார். வந்த வேகத்தில் 3 பவுண்டரிகள் அடித்த அவர் 22 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், முதல் நாள் ஆட்டநேரம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து 68 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. விராட் கோலி 59 ரன்களுடனும், அஜின்க்யா ரஹானே 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

வங்கதேச அணி தரப்பில் எபாடட் ஹோசனை 2 விக்கெட்டுகளையும், அல் அமின் ஹோசன் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com