ரோஹித், புஜாரா அபார பேட்டிங்: தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி தரும் இந்திய அணி!

4-ம் நாள் உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய அணியின் ரன் எடுக்கும் வேகம் இந்தளவுக்கு மாறும் என யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது...
ரோஹித், புஜாரா அபார பேட்டிங்: தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி தரும் இந்திய அணி!

4-ம் நாள் உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய அணியின் ரன் எடுக்கும் வேகம் இந்தளவுக்கு மாறும் என யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. திடீரென புஜாராவும் ரோஹித் சர்மாவும் வேகமெடுத்து ஆடி, இந்திய அணியின் ஆதிக்கத்தை வலுப்படுத்தியுள்ளார்கள். இதனால் இந்திய அணி வெற்றிக்கு முயற்சி செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இந்தியா-தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடந்து வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 502/7 ரன்களுக்கு டிக்ளோ் செய்தது. மயங்க் அகா்வால் 215, ரோஹித் 176 ரன்களை குவித்தனா். 3-ம் நாள் முடிவில், தனது முதல் இன்னிங்ஸில் 118 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா. செனுரன் முத்துசாமி 12, கேசவ் மஹாராஜ் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

இந்நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணி, 131.2 ஓவர்களில் 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முத்துசாமி 33 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மஹாராஜ் 9, ரபடா 15 ரன்களுடன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இந்தியத் தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளும் ஜடேஜா 1 விக்கெட்டுகளும் இஷாந்த் சர்மா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள். 

இதன்பிறகு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி, 4-ம் நாள் உணவு இடைவேளையின்போது 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 25 ரன்கள், புஜாரா 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ரோஹித் சர்மா சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துகளைப் பதம் பார்த்தார். 72 பந்துகளில் அரை சதமெடுத்தார் ரோஹித். ஆரம்பத்தில் மிகவும் பொறுமையாக விளையாடிய புஜாரா திடீரென தன்னுடைய ஆட்ட உத்தியை மாற்றினார். 

உணவு இடைவேளைக்குப் பிறகு புஜாராவின் ஆட்டம் தான் ரசிகர்களை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. முதலில் 62 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார் புஜாரா. இதனால் ரசிகர்களின் விமரிசனத்துக்கு ஆளாகினார். ஆனால் அடுத்த 77 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அசத்தினார் புஜாரா. இதனால் இன்றைய நாளின் 2-வது பகுதியின் கடைசி 20 ஓவர்களில் இந்திய அணிக்கு அதிக ரன்கள் கிடைத்தன. 106 பந்துகளில் அரை சதமெடுத்தார் புஜாரா. 

4-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 48 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 84, புஜாரா 75 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணிக்கு 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 246 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com