போதுமா இத்தனை வாய்ப்புகள்?: தொடர்ந்து தடுமாறி வரும் கே.எல். ராகுல்!
By எழில் | Published On : 02nd September 2019 11:47 AM | Last Updated : 02nd September 2019 11:47 AM | அ+அ அ- |

சரியாக விளையாடாத காரணத்தால் முரளி விஜய்யும் ஷிகர் தவனும் இந்திய டெஸ்ட் அணியில் தற்போது இல்லை. ஆனால் அவர்களைப் போலவே நீண்டகாலமாக ஃபார்மில் இல்லாத கே.எல். ராகுல் தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்குத் திறமையை நிரூபிக்கத் தொடர்ந்து வாய்ப்புகள் தந்துகொண்டிருக்கிறார் கேப்டன் கோலி. இதற்கு ஒரு முடிவுதான் என்ன?
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரு டெஸ்டுகளில் மொத்தமாக 4 இன்னிங்ஸில் 101 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் ராகுல். ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அதிகபட்சமாக 44 ரன்கள்.
இதே ராகுல் தான் ஒரு சமயம் 14 இன்னிங்ஸில் 10 அரை சதங்கள் எடுத்து இந்திய அணிக்குப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால் அந்த டெஸ்டுகள் எல்லாம் பெரும்பாலும் இந்தியாவிலும் நடைபெற்றவை. 2 டெஸ்டுகள் இலங்கையிலும் நடைபெற்றன. கடந்த வருடம் இங்கிலாந்தில் 5 டெஸ்டுகளிலும் விளையாடிய ராகுல் ஒரு சதம் மட்டும் எடுத்து மீதமுள்ள 9 இன்னிங்ஸையும் வீணாக்கினார். கடைசி டெஸ்டில் அந்தச் சதத்தை அடித்ததால் அவர் மீது நம்பிக்கைகள் வைத்துக் கூடுதல் வாய்ப்புகள் வழங்கினார் கோலி. ஆனால் அதற்குப் பிறகு விளையாடிய 7 டெஸ்டுகளிலும் ஒரு அரை சதம் கூட எடுக்கமுடியாமல் தடுமாறி வருகிறார் ராகுல். ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்டில் அவரை அணியில் சேர்க்கவில்லை. இருப்பினும் பிருத்வி ஷா-வால் இந்திய அணியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார் ராகுல். ஆனால் இதையும் தற்போது வீணாக்கியுள்ளார்.
2018-க்குப் பிறகு 15 டெஸ்டுகள் விளையாடி, 22.23 சராசரி மட்டுமே வைத்துள்ளார் ராகுல். இங்கிலாந்துக்கு எதிராக ஒரு சதமும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு அரை சதமும் எடுத்துள்ளார். அவ்வளவுதான். 2018-க்கு முன்பு 44.62 டெஸ்ட் சராசரி ரன்கள் வைத்திருந்தா ராகுல் தற்போது 34.58க்கு இறங்கிவிட்டார். தற்போது தனது பேட்டிங் முறையில் சிறிது மாற்றம் கொண்டு வந்து மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிப் பார்த்தும் அவருக்கு அதிர்ஷ்டம் கைகூடவில்லை.
இதற்குப் பிறகும் ராகுலுக்கு வாய்ப்புகள் தந்துதான் ஆகவேண்டுமா எனத் தேர்வுக்குழுவினரும் கோலியும் யோசிக்கவேண்டும். உள்ளூர் கிரிக்கெட்டுக்குச் சென்று தனது பேட்டிங்கைச் சரி செய்ய ராகுலுக்குச் சந்தர்ப்பங்களை உருவாக்கித் தரவேண்டும். தற்போதைய நிலைமை ராகுலுக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் ஆரோக்கியமானதாக இல்லை.