அடித்தார் ஐம்பது; 29 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்தார் சச்சினுடன்: 'வெல்டன்' விஹாரி
By IANS | Published On : 02nd September 2019 05:06 PM | Last Updated : 02nd September 2019 05:06 PM | அ+அ அ- |

கிங்ஸ்டன்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 50 ரன்கள் அடித்ததன் மூலம் இந்திய பேட்ஸ் மேன் ஹனுமா விஹாரி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் மே.இ. தீவுகளுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் முதலில் விளையாடிய இந்திய அணி, 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 2-வது நாளின் முடிவில் மே.இ. தீவுகள் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 47.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, பாலோ ஆன் ஆனது. இந்திய அணித் தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 'பாலோ ஆன்' கொடுப்பதற்குப் பதிலாக இந்திய கேப்டன் கோலி மீண்டும் பேட்டிங் செய்வதையே விரும்பினார். ஆனால் ஆரம்பத்தில் 57 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. பிறகு ஜோடி சேர்ந்த ரஹானேவும் விஹாரியும் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு இருவருமே அரை சதமெடுத்தார்கள்.
இறுதியில் இந்திய அணி 54.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரஹானே 64, விஹாரி 53 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2-வது டெஸ்டை வெல்ல, சாத்தியமில்லாத 468 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விஹாரி ஏற்கனவே 111 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் அரை சதம் எடுத்ததன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் 6-ஆவது வீரராக களமிறங்கி சதமும் ,அரை சதமும் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
கடைசியாக 1990-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டர் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஆறாவது வீரராக களமிறங்கி, முறையே 68 மற்றும் 119 (நாட் அவுட்) ரன்களுடன் இந்த சாதனையை படைத்திருந்தார்.
முதலாவதாக இந்திய வீரர் பாலி உம்ரிகர் 1962-ஆம் ஆண்டு இதே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அந்த சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.