
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளை டிரா செய்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து 3-வது இடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து அணி. 3-வது டெஸ்டை வென்றதன் மூலம் விஸ்டன் கோப்பையைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது. இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு 146 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் இருந்தது. ஆனால் இரு டெஸ்டுகளில் வெற்றி பெற்று 80 புள்ளிகளைச் சேர்த்துக்கொண்டது. இதனால் 226 புள்ளிகளுடன் இந்தியா (360), ஆஸ்திரேலியா (296) ஆகிய அணிகளுக்கு அடுத்ததாக 3-ம் இடத்தைப் பிடித்தது.
அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியது இங்கிலாந்து அணி. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 2-வது மற்றும் 3-வது டெஸ்டுகள் டிரா ஆயின. இதனால் டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது.
கடைசி இரு டெஸ்டுகள் டிரா ஆனதால் இங்கிலாந்து அணியால் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேற முடியாமல் போய்விட்டது. மழையால் 54 புள்ளிகளை அள்ளும் வாய்ப்பைத் தவறவிட்டு விட்டது. இதனால் ஆஸ்திரேலியவை விட நான்கு புள்ளிகள் குறைவாக 292 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் தொடர்ந்து உள்ளது. கடைசி டெஸ்டை ஒருவேளை வென்றிருந்தால் 2-ம் இடத்துக்கு முன்னேறியிருக்கும்.
அடுத்ததாக இலங்கை, இந்தியாவுக்குச் சென்று இரு டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்டுகளிலும் இலங்கைக்கு எதிராக 2 டெஸ்டுகளிலும் விளையாடவுள்ளது. இத்தொடர்களில் வென்றால் மட்டுமே இங்கிலாந்து அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல்
1. இந்தியா - 360 புள்ளிகள்
2. ஆஸ்திரேலியா - 296 புள்ளிகள்
3. இங்கிலாந்து - 292 புள்ளிகள்
4. நியூசிலாந்து - 180 புள்ளிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.