
பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த 6 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மீதமுள்ள வீரர்களும் பயிற்சியாளர்களும் வலைப்பயிற்சியில் ஈடுபடுவதற்கான தடையை நீட்டித்துள்ளது நியூசிலாந்து அரசாங்கம்.
நியூசிலாந்தில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் டி20, டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கின்றன. நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2-0 என நியூசிலாந்து வென்றுள்ளது. இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதற்கு அடுத்ததாக பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் மூன்று டி20, இரு டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. டிசம்பர் 18-ல் டி20 தொடரும் டிசம்பர் 26-ல் டெஸ்ட் தொடரும் தொடங்கவுள்ளன.
லாகூரிலிருந்து நியூசிலாந்துக்குப் புறப்படுவதற்கு முன்பு பாகிஸ்தான் அணியினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா இல்லை என உறுதியானது. கரோனா அறிகுறிகள் தென்பட்ட ஃபகார் ஸமான், அணியிலிருந்து விலகினார். எனினும் நியூசிலாந்துக்கு வந்திறங்கிய பாகிஸ்தான் அணியினருக்கு முதலில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் ஆறு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த ஆறு பேரும் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
நவம்பர் 24 அன்று நியூசிலாந்துக்கு வந்த பாகிஸ்தான் வீரர்கள், 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் பாகிஸ்தான் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு விதிமுறைகளை அலட்சியப்படுத்தும் வீரர், பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த 54 பேருக்கும் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 44 பேருக்கு கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆறு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 4 பேர் இதற்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றுடன் (டிசம்பர் 4) பாகிஸ்தான் அணியின் தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைய வேண்டும். ஆனால், பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் டிசம்பர் 9 வரை பாகிஸ்தான் அணியினரைத் தனிமைப்படுத்தியுள்ளது நியூசிலாந்து அரசாங்கம். இதனால் அதுவரை பாகிஸ்தான் அணியினரால் பயிற்சியில் ஈடுபட முடியாது. டிசம்பர் 9-க்குப் பிறகு நியூசிலாந்து அரசின் அனுமதியுடன் பாகிஸ்தான் வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடலாம்.
பாகிஸ்தான் வீரர்களின் தனிமைப்படுத்துதல் காலத்தை நீட்டிப்பு செய்ததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. கரோனா பாதிப்பு இல்லாத 44 பேரை இன்று முதல் பயிற்சி பெற அனுமதித்திருக்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து உடனடியாகச் செய்தி வெளியிடப்படுகிறது. ஆனால் கரோனா பாதிப்பு இல்லாத 44 பேரைப் பற்றி தகவல் சொல்லவில்லை என்று கூறியுள்ளது. அடுத்த இரு வாரங்களில், டிசம்பர் 18 அன்று டி20 தொடர் தொடங்குவதால் பாகிஸ்தான் அணியினரை விரைவில் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது. தற்போதைய சூழலில் டிசம்பர் 9-க்குப் பிறகுதான் பாகிஸ்தான் வீரர்களால் பயிற்சியில் ஈடுபட முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.