நான் சுயமரியாதைக்காரன்: முகமது ஆமிர்

​சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு பாகிஸ்தான் அணி நிர்வாகமே காரணம் எனவும் தனக்கு சுயமரியாதை உள்ளது எனவும் அந்த நாட்டு வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர் தெரிவித்துள்ளார்.
நான் சுயமரியாதைக்காரன்: முகமது ஆமிர்


சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு பாகிஸ்தான் அணி நிர்வாகமே காரணம் எனவும் தனக்கு சுயமரியாதை உள்ளது எனவும் அந்த நாட்டு வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தனது யூட்யூப் சேனலில் பாகிஸ்தான் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோரையே ஆமிர் தாக்கி பேசியுள்ளார்.

ஆமிர் பேசியது:

"பணம் சம்பாதிப்பதற்காக டி20 தொடர்களில் மட்டுமே விளையாட நான் விரும்புவதாகவும், டெஸ்ட் ஆட்டங்களில் விளையாட விருப்பமில்லை என்பது போன்றும் அவர்கள் மக்களை மூளைச் சலவை செய்கின்றனர். எனது பிம்பத்தை சிதைக்க முயற்சிக்கின்றனர்.

இது மிகவும் கடினமான முடிவு. இதுகுறித்து பிரச்னை எழுப்புவதற்காகவும், என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதனாலும்தான் ஓய்வு முடிவை எடுத்துள்ளேன். நியூசிலாந்து தொடருக்கான 35 வீரர்கள் அடங்கிய பட்டியலில்கூட என்னைத் தேர்வு செய்யவில்லை. இது மிகவும் வேதனையளிக்கிறது.

டி20 ஆட்டங்களில் மட்டுமே விளையாட வேண்டும் என்று நினைத்திருந்தால், நியூசிலாந்து தொடருக்கு என்னைத் தேர்வு செய்யாததற்கு நான் ஏன் வருந்தப்போகிறேன். 

தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராக எதுவும் இல்லை என்று அவர்கள் கூறுவார்கள். ஆனால், நான் தேர்வு செய்யப்படாதது பற்றியோ அல்லது என்னைப் பற்றிய திட்டங்கள் குறித்தோ மூத்த வீரர் என்ற அடிப்படையில்கூட மரியாதை நிமித்தமாக நேரடியாகத் தெரிவிக்க மாட்டார்கள். இதுதான் நடக்கிறது. 

செயல்பாடு குறித்து அவர்கள் என்ன பேசுவார்கள். நான் கிரிக்கெட்டுக்கு திரும்பியது முதல், பிஎஸ்எல் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினேன். ஆசிய கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் நன்றாகப் பந்துவீசினேன். கடந்தாண்டு உலகக் கோப்பையில் தோள்பட்டை காயம் இருந்தும், நான்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினேன். ஐசிசி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நான் இன்னும் இருக்கிறேன். இன்னும் நான் என்னதான் செய்ய வேண்டும்?

ஆம், எனக்குத் தெரியும். நான் செய்த தவறுக்கு அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுவிட்டேன். அதற்கான தண்டனையும் அனுபவித்து விட்டேன். ஆனால், நான் பலவீனமாகவில்லை. நான் திரும்ப வந்து அனைத்தையும் எதிர்கொண்டு, பாகிஸ்தானுக்காக என்னால் முடிந்தவற்றை செய்துள்ளேன்.

பாகிஸ்தானுக்குப் பதில் டி20 தொடர்களில்தான் பங்கேற்பேன் என நான் எப்போது கூறினேன். தேசிய அணியில் சேர்க்கப்படாதபோது, டி20 தொடர்களில் விளையாடி என்னை நிரூபிப்பதைக் காட்டிலும் என்னால் வேறு என்ன செய்ய முடியும்.

எனக்கு சுயமரியாதை உள்ளது, அதில் சமரசம் செய்துகொள்ள முடியாது. மரியாதை கொடுத்து மரியாதை பெறுவதில் நம்பிக்கை கொண்டுள்ளவன் நான்."

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக 28 வயதே ஆன முகமது ஆமிர் சமீபத்தில் அறிவித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com