மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாக். மீண்டும் தோல்வி: 2-0 என டி20 தொடரை வென்றது நியூசி.

​பாகிஸ்தானுடனான 2-வது டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :20 டிசம்பர் 2020, 11:38 am

DIN


பாகிஸ்தானுடனான 2-வது டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் ஹாமில்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி சிறப்பாக பந்துவீச 56 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது பாகிஸ்தான். எனினும், அனுபவ வீரரான முகமது ஹபீஸ் தனிநபராக கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹபீஸ் 57 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக அதிகபட்ச ஸ்கோர் 20 பந்துகளில் 22 ரன்கள். இதுவே பாகிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்தது.

164 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்தில் மற்றும் டிம் செய்ஃபெர்ட் களமிறங்கினர். இந்த இணை அதிரடி தொடக்கத்தை அளிக்க 21 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தது. எனினும், கப்தில் 21 ரன்களுக்கு ஃபஹீம் அஷ்ரஃப் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, செய்ஃபெர்டுடன் கேப்டன் கேன் வில்லியம்சன் இணைந்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடினார். இதனால், மேற்கொண்டு விக்கெட்டுகள் விழவில்லை. 19.2 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்த நிலையில், 164 ரன்கள் எடுத்த நியூசிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த செய்ஃபெர்ட் 63 பந்துகளில் 84 ரன்களும், வில்லியம்சன் 42 பந்துகளில் 57 ரன்களும் எடுத்தனர். 21 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சௌதி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து வென்றுள்ளது. இருஅணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் நேபியரில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.