பாக்ஸிங் டே: ஒரே நாளில் தொடங்கவுள்ள மூன்று டெஸ்டுகள்!

இந்தியா - ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் - நியூசிலாந்து, இலங்கை - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள்...
பாக்ஸிங் டே: ஒரே நாளில் தொடங்கவுள்ள மூன்று டெஸ்டுகள்!

பாக்ஸிங் டே தினத்தை முன்னிட்டு நாளை முதல் மூன்று டெஸ்டுகள் தொடங்கவுள்ளன.

இந்தியா - ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் - நியூசிலாந்து, இலங்கை - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் நாளை முதல் தொடங்கும் டெஸ்டுகளில் பங்கேற்கின்றன. 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. 2-வது டெஸ்ட் நாளை முதல் மெல்போர்னில் தொடங்குகிறது. 3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.

2-வது டெஸ்டுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் இடம்பெற்ற பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார். முதல் குழந்தை பிறக்கும்போது மனைவி அனுஷ்காவுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் டெஸ்டை முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார் விராட் கோலி. காயம் காரணமாக ஷமி இடம்பெறவில்லை. சஹாவுக்குப் பதிலாக ரிஷப் பந்த், 2-வது டெஸ்டுக்கான விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியில் ஜடேஜா மீண்டும் இடம்பிடித்துள்ளார். பேட்ஸ்மேன் ஷுப்மன் கில், வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகிறார்கள். முதல் டெஸ்டில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி மெல்போர்ன் டெஸ்டிலும் விளையாடவுள்ளது.

இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் நாளை தொடங்குகிறது. 2-வது டெஸ்ட், ஜோகன்னஸ்பர்க்கில் ஜனவரி 3 அன்று தொடங்குகிறது.

பாகிஸ்தான் அணி, நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடரை 2-1 என நியூசிலாந்து வென்றுள்ளது. முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் ஜனவரி 3 அன்று தொடங்குகிறது.

ஒரே நாளில் மூன்று டெஸ்டுகள் தொடங்குவதால் டெஸ்ட் பிரியர்களுக்குக் கொண்டாட்டமான தினமாக நாளை அமையப் போகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com