பாகிஸ்தான் கிரிக்கெட்: மறுபரிசோதனையில் ஆறு வீரர்களுக்கு கரோனா இல்லை!

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பத்து பாகிஸ்தான் வீரர்களுக்கு மறுபரிசோதனை நடத்தப்பட்டதில் நான்கு வீரர்களுக்கு மட்டும்...
பாகிஸ்தான் கிரிக்கெட்: மறுபரிசோதனையில் ஆறு வீரர்களுக்கு கரோனா இல்லை!

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பத்து பாகிஸ்தான் வீரர்களுக்கு மறுபரிசோதனை நடத்தப்பட்டதில் நான்கு வீரர்களுக்கு மட்டும் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8 முதல் தொடங்குகிறது. ஜூலை 28 அன்று டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதையடுத்து பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செல்லவுள்ளது. ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் 3 டெஸ்ட், 3 டி20 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. இதில் சொந்தக் காரணங்களால் தங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிர், பேட்ஸ்மேன் ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் அணி இந்த மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டது. 29 பேர் கொண்ட இந்த அணியில் யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹைதர் அலி தேர்வாகியுள்ளார்.

நாளை (ஜூன் 28) பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்துக்குச் செல்லவுள்ள நிலையில் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 10 வீரர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கிரிக்கெட் உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. எனினும் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் மாற்றமில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி வாசிம் கான் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் மான்செஸ்டருக்குச் செல்லும் பாகிஸ்தான் அணியில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 10 வீரர்களும் தவிர்க்கப்பட்டுள்ளார்கள். இதற்குப் பதிலாக 5 மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 10 வீரர்களில் முகமது ஹபீஸும் ஒருவர். ஆனால் தான் தனியாக கரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் நெகடிவ் என முடிவு வந்ததாக அவர் கூறினார். அவருடைய இந்தச் செயலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி வாசிம் கான் கூறியதாவது: ஹபீஸிடம் நான் பேசினேன். எங்களிடம் விவாதிக்காமல் அவர் தனது பரிசோதனை முடிவை வெளியே சொன்னதில் அதிருப்தி அடைந்துள்ளோம். ஒப்பந்தம் வழங்கப்படாத வீரர் என்பதால் தனியாகப் பரிசோதனைகளை அவர் மேற்கொள்ளலாம். ஆனால் அதை வெளியே சொன்னதுதான் தவறு. நாங்கள் மேற்கொண்ட கரோனா பரிசோதனைகளில் பாசிடிவ் என்கிற முடிவு வந்த 10 வீரர்களில் அவரும் ஒருவர். அனைத்து வீரர்களையும் 26-ம் தேதி மறுபடியும் பரிசோதனை செய்யவுள்ளோம். இந்நிலையில் ட்விட்டரில் தான் தனியாக மேற்கொண்ட பரிசோதனையின் முடிவு பற்றி அவர் தெரிவித்தது சரியல்ல. அவரிடமும் இதைத் தெரிவித்துள்ளேன் என்றார்.

இங்கிலாந்தின் மான்செஸ்டருக்குச் செல்லும் பாகிஸ்தான் அணியில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 10 வீரர்களும் தவிர்க்கப்பட்டுள்ளார்கள். இதற்குப் பதிலாக 5 மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தற்போது அவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10 வீரர்கள், ஒரு ஊழியர் உள்ளிட்ட கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 11 பேருக்கும் நேற்று 2-வது கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு ஜூன் 29 அன்று அனைவருக்கும் மற்றொரு பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த இரு பரிசோதனை முடிவுகளிலும் நெகடிவ் என உறுதியானால், அந்த வீரர்கள் உடனடியாக இங்கிலாந்துக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சென்றபிறகு பாகிஸ்தான் வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகிய அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதன்பிறகு ஜூலை 13 முதல் பயிற்சியைத் தொடங்கவுள்ளார்கள். 

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பத்து பாகிஸ்தான் வீரர்களுக்கு மறுபரிசோதனை நடத்தப்பட்டதில் கஷிஃப் பட்டி, ஹாரிஸ் ராஃப், ஹைதர் அலி, இம்ரான் கான் ஆகிய நான்கு வீரர்களுக்கு மட்டும் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் உறுதியாகியுள்ளது. முகமது ஹபீஸ், ஃபகார் ஸமான், சதாப் கான், முகமது ரிஸ்வான், முகமது ஹஸ்நைன் ஆகிய வீரர்களுக்கு நெகடிவ் என முடிவு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com