கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறு ஹாக்கி வீரர்களும் மருத்துவமனையில் அனுமதி
By DIN | Published On : 12th August 2020 10:27 AM | Last Updated : 12th August 2020 10:27 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறு இந்திய ஹாக்கி வீரர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மன்ப்ரீத் சிங், சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண் குமார், கிருஷன் பதக் என ஐந்து வீரர்கள் கரோனாவால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டார்கள். ஆகஸ்ட் 4 முதல் பெங்களூரில் உள்ள சாய் அமைப்பில் ஹாக்கி பயிற்சி முகாம் நடைபெற்று வருகிற நிலையில் இத்தகவலை இந்திய விளையாட்டு ஆணையம (சாய் அமைப்பு) தெரிவித்தது.
இதையடுத்து மற்றொரு ஹாக்கி வீரரான மன்தீப் சிங்கும் கரோனாவால் பாதிக்கப்பட்டார். அறிகுறிகள் எதுவும் இல்லாததால் சாய் வளாகத்திலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டார். ஆறு வீரர்களும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்கள். அனைவரும் நல்ல உடல்நிலையில் இருப்பதாகச் சமீபத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட ஹாக்கி வீரர் மன்தீப் சிங் மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கரோனா வைரஸ் தொற்று சாதாரண நிலையிலிருந்து மிதமான நிலையை அடைந்துள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்தீப் சிங்கின் உடல்நிலை நன்றாக உள்ளது. ஆபத்து எதுவும் இல்லை என சாய் அமைப்பு தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது மீதமுள்ள 5 வீரர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சிறந்த மருத்துவ சிகிச்சைக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சாய் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. அனைவரும் நல்ல உடல்நிலையில் உள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.