
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.
இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்றது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 4-ம் நாளில் இங்கிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசியது. 4-ம் நாள் முடிவில் இந்திய அணி, 82 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. இந்த டெஸ்டின் கடைசி கட்டத்தில் தடுமாற்றமான நிலையில் இருந்த இந்தியா, 5-ஆம் நாளில் பந்துவீச்சாளர்களான முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ராவின் அதிரடியான ‘ஆல்-ரவுண்ட்’ ஆட்டத்தால் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வெற்றியை எட்டியது. இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஷமி 56, பும்ரா 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிறகு, இந்திய அணி அற்புதமாகப் பந்துவீசி 120 ரன்களுக்கு இங்கிலாந்தை ஆல் அவுட் செய்தது. இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்டில் 4-ம் நாளன்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. எனினும் வலியுடன் இந்தியாவின் 2-வது இன்னிங்ஸில் அவர் பந்துவீசினார். தற்போது காயம் காரணமாக 3-வது டெஸ்டில் மார்க் வுட் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது. இதுபற்றி இங்கிலாந்து பயிற்சியாளர் கிரிஸ் சில்வர்வுட் கூறியதாவது:
மார்க் வுட்டுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அடுத்த சில நாள்களில் அவர் விளையாடுவது குறித்து தெரிய வரும். 3-வது டெஸ்ட் நெருங்கும் சமயத்தில் அனைவருடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம். மார்க் வுட் குணமாகவில்லையென்றால் 3-வது டெஸ்டில் நிச்சயமாக விளையாட வேண்டும் என்று அவரைக் கட்டாயப்படுத்த மாட்டோம். அவரைக் கவனித்துக்கொள்வோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.