ஆஷஸ்: சதமடித்து ஆட்டமிழந்த ஆஸி. வீரர் லபுஷேன்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் பகலிரவு டெஸ்டில் ஆஸி. வீரர் மார்னஸ் லபுஷேன் சதமடித்துள்ளார்.
ஆஷஸ்: சதமடித்து ஆட்டமிழந்த ஆஸி. வீரர் லபுஷேன்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் பகலிரவு டெஸ்டில் ஆஸி. வீரர் மார்னஸ் லபுஷேன் சதமடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டை ஆஸி. அணி எளிதாக வென்றது. 

2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் உள்ளது.

2-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் வியாழன் முதல் நடைபெற்று வருகிறது.  கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ், அடிலெய்ட் டெஸ்டிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக பிரபல வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆஸி. கேப்டனாகவும் டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்கள். மைக்கேல் நசீர் ஆஸி. அணியில் இடம்பிடித்தார்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டேவிட் வார்னர் 167 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 89 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. லபுஷேன் 95 ரன்களுடனும் ஸ்மித் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இன்று ஆட்டம் தொடர்ந்தபோது 287 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார் லபுஷேன். இதன்பிறகு ராபின்சன் பந்தில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 105 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 32, டிராவிஸ் ஹெட் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com