கோலி பேட்டி பற்றி கங்குலியிடம் கேட்கவேண்டும்: கவாஸ்கர்

கோலியின் பேட்டி குறித்து பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலியிடம் தான் கேள்வியெழுப்ப வேண்டும் என முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார். 
கோலி பேட்டி பற்றி கங்குலியிடம் கேட்கவேண்டும்: கவாஸ்கர்

கோலியின் பேட்டி குறித்து பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலியிடம் தான் கேள்வியெழுப்ப வேண்டும் என முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார். 

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும் ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடருக்கு கேப்டனாகவும் டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

மும்பையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித்துக்குப் பதிலாக ப்ரியங் பஞ்சால், இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் விராட் கோலி கூறிய சில விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 

டிசம்பர் 8 அன்று தேர்வுக்குழு கூடுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு தேர்வுக்குழுவினர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகியது முதல் எவ்வித தகவலும் எனக்கு அளிக்கப்படவில்லை. தெ.ஆ. தொடருக்கான டெஸ்ட் அணி பற்றி தேர்வுக்குழுத் தலைவர் என்னிடம் விவாதித்தார். இருவரும் அணி பற்றிய விவரங்களை ஏற்றுக்கொண்டோம். அந்த தொலைபேசி அழைப்பு முடியும் முன்பு, ஒருநாள் கேப்டன் பதவியில் நான் இல்லை என்பதை ஐந்து தேர்வுக்குழு உறுப்பினர்களும் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. அப்படியா நல்லது எனப் பதில் அளித்தேன். டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது அதை நன்கு வரவேற்றார்கள். முற்போக்கான முடிவு எனப் பாராட்டப்பட்டது. டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என என்னிடம் யாரும் சொல்லவில்லை என்றார் கோலி.

டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என கோலியிடம் கோரிக்கை வைத்ததாக பிசிசிஐ தலைவரும் முன்னாள் வீரருமான செளரவ் கங்குலி கூறிய நிலையில் விராட் கோலி இவ்வாறு கூறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கோலி, கங்குலி ஆகிய இருவரும் முரண்பாடாகப் பேசியிருப்பதால் அது இந்திய கிரிக்கெட்டைப் பாதிக்குமா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் வீரர் சுநீல் கவாஸ்கர் ஒரு பேட்டியில் கூறியதாவது:

கோலியின் கருத்துகள் பிசிசிஐ அமைப்பைக் குறிப்பிடவில்லை. தான் இப்படியொரு தகவலை கோலியிடம் சொன்னதாகக் கூறியவரிடம் நாம் கேள்வி எழுப்ப வேண்டும். கங்குலி பிசிசிஐ தலைவர். எனவே முரண்பாடு பற்றி அவரிடம் தான் கேட்கவேண்டும். நீங்கள் என்ன சொன்னீர்கள், இந்திய கேப்டன் என்ன சொன்னார் என அவரிடம் தான் இந்த முரண்பாடு பற்றி கேள்வியெழுப்ப வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com