ஆஷஸ் பகலிரவு டெஸ்ட்: ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ் விலகல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2-வது டெஸ்டிலிருந்து கம்மின்ஸ் விலகியுள்ளார்.
ஆஷஸ் பகலிரவு டெஸ்ட்: ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ் விலகல்


அடிலெய்டில் இன்று நடைபெற்று வரும் ஆஷஸ் பகலிரவு டெஸ்டிலிருந்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டை ஆஸி. அணி எளிதாக வென்றது. 

2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் உள்ளது.

2-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் இன்று முதல் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் கரோனா அச்சம் காரணமாக ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ், அடிலெய்ட் பகலிரவு டெஸ்டிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பிரபல வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆஸி. கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதன் அன்று அடிலெய்டில் உள்ள உணவு விடுதிக்குச் சென்றார் கம்மின்ஸ். அப்போது அவர் உணவு அருந்திய மேஜைக்கு அருகில் இருந்தவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2-வது டெஸ்டிலிருந்து கம்மின்ஸ் விலகியுள்ளார். மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் ஆகியோரும் அதே உணவு விடுதிக்குச் சென்று உணவு அருந்தினாலும் அவர்கள் வேறொரு மேஜையில் அமர்ந்ததால் இந்த விவகாரத்தால் அவர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. இருவரும் அடிலெய்ட் டெஸ்டில் விளையாடுகிறார்கள்.

கரோனா பரிசோதனையில் கரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்தாலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் கம்மின்ஸ், ஏழு நாள்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பிரிஸ்பேன், அடிலெய்ட் டெஸ்டுகளில் விளையாடும் வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறத் தடையேதும் இல்லை என்பதால் எவ்வித விதிமுறையையும் கம்மின்ஸ் மீறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்மின்ஸ் விலகலால் 2-வது டெஸ்டில் இரு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஸ்டீஸ் ஸ்மித் கேப்டனாகவும் டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மைக்கேல் நசீர் ஆஸி. அணியில் இடம்பிடித்துள்ளார். பாக்ஸிங் டே அன்று தொடங்கும் 3-வது டெஸ்டில் கம்மின்ஸ் இடம்பெறுவார் எனக் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com