வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் நதீம் பந்துவீச்சு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்: விராட் கோலி

அப்படிப் பந்துவீசியிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். எதிரணி 80-90 ரன்கள் குறைவாக எடுத்திருப்பார்கள்.
வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் நதீம் பந்துவீச்சு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்: விராட் கோலி

சுழற்பந்து வீச்சாளர்களான வாஷிங்டன் சுந்தரும் ஷபாஸ் நதீமும் இன்னும் சிறப்பாகப் பந்துவீசியிருந்தால் இங்கிலாந்து அணியினர் 80-90 ரன்கள் குறைவாக எடுத்திருப்பார்கள் என விராட் கோலி கூறியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 578 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடத் தொடங்கிய இந்தியா,  337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து ஃபாலோ ஆன் வாய்ப்பு வழங்காமல் 2-ஆவது இன்னிங்ஸை ஆடியது. அஸ்வின் சுழலில் சுருண்ட இங்கிலாந்து 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 420 என்ற கடினமான இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 58.1 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் சென்னை டெஸ்டை 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

வேகப்பந்து வீச்சாளர்களும் அஸ்வினும் தொடர்ச்சியாக நன்குப் பந்துவீசினார்கள். வாஷிங்டன் சுந்தரும் ஷபாஸ் நதீமும் குறைந்த ரன்களைக் கொடுக்குமளவு பந்துவீசியிருக்கலாம். இன்னும் கூடுதலாக அழுத்தம் கொடுத்திருக்கலாம். அப்படிப் பந்துவீசியிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். எதிரணி 80-90 ரன்கள் குறைவாக எடுத்திருப்பார்கள்.

பேட்டிங்கிலும் முதல் இன்னிங்ஸில் நாங்கள் 70-80 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம். எனில் டெஸ்ட் அப்போது சமநிலையில் இருந்திருக்கும். 

நாங்கள் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது டெஸ்ட் அவர்கள் பக்கம் சென்றுவிட்டது. நீண்ட நேரம் பேட்டிங் செய்ய நினைத்தோம். ஆனால் அதைச் செய்ய முடியவில்லை. 

பந்தின் தரம் சரியாக இல்லை. 60 ஓவர்களில் பந்து அதன் தன்மையை இழந்து விட்டது. ஒரு டெஸ்ட் அணியாக இதை நாங்கள் அனுபவித்திருக்கவில்லை. இதற்காக நாம் தயாராகவும் முடியாது. முதல் இரு நாள்களில் இதுதான் உண்மை நிலவரம். எனினும் தோல்விக்கான காரணமாக இதைச் சொல்ல விரும்பவில்லை. எங்களை விடவும் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com