சென்னை டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி: அக்ஷர் படேலுக்கு 5 விக்கெட்டுகள்!
இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 2-வது இன்னிங்ஸில் அறிமுக வீரர் அக்ஷர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
சென்னையில் தொடங்கிய 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் நீக்கம் செய்யப்பட்டார். பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அக்ஷர் படேல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இந்த டெஸ்டுக்கு 50% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியா முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி, 59.5 ஓவர்களில் 134 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் அஸ்வின் சதத்துடன் 286 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 429 ரன்கள் பின்தங்கியிருந்தது.
இன்று ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் லாரன்ஸை 26 ரன்களில் வீழ்த்தினார் அஸ்வின். ரிஷப் பந்த் அற்புதமாக ஸ்டம்பிங் செய்து அவரை வெளியேற்றினார். அடுத்து, பென் ஸ்டோக்ஸை மீண்டுமொரு முறை வீழ்த்தினார் அஸ்வின். 8 ரன்கள் மட்டுமே அவர் எடுத்தார். போப், 12 ரன்களில் அக்ஷர் படேல் பந்துவீச்சிலும் பென் ஃபோக்ஸ் 2 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தார்கள்.
4-ம் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 48.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது.
உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி சுலபமாக மீதமுள்ள விக்கெட்டுகளை வீழ்த்தியது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், 33 ரன்களில் அக்ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்டோன் ரன் எதுவும் எடுக்காமல் அக்ஷர் படேல் பந்துவீச்சில் வீழ்ந்தார். இதனால் அறிமுக டெஸ்டிலேயே அக்ஷர் படேலுக்கு 5 விக்கெட்டுகள் கிடைத்தன. கடைசியில் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்தார் மொயீன் அலி. அக்ஷர் பந்துவீச்சில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் அடித்தார். 18 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்த மொயீன் அலி, குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வீழ்ந்தார்.
இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 164 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 2-வது இன்னிங்ஸில் அக்ஷர் படேல் 5 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்கள்.
3-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் பிப்ரவரி 24 அன்று தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...