ஆஸி. டெஸ்ட் தொடர் வெற்றியை அதிகமாகக் கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை

ஆஸி. அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றியை முன்வைத்து அதிகமாகக் கொண்டாட வேண்டாம் என...
ஆஸி. டெஸ்ட் தொடர் வெற்றியை அதிகமாகக் கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை

ஆஸி. அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றியை முன்வைத்து அதிகமாகக் கொண்டாட வேண்டாம் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. பிரிஸ்பேன் டெஸ்டுக்கு முன்பு டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் இருந்தது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 97 ஓவர்களில் 329 ரன்கள் எடுத்து பிரிஸ்பேன் டெஸ்டை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரிஷப் பந்த் நம்பமுடியாத விதத்தில் இலக்கை விரட்டி 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. 

முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமாகத் தோற்றது இந்திய அணி. அதன்பிறகு மெல்போர்ன் டெஸ்டை வென்றது. சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டைக் கடுமையாகப் போராடி டிரா செய்தது. தற்போது கடினமான இலக்கை 5-ம் நாளில் விரட்டி பிரிஸ்பேன் டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியுள்ளது.

டெஸ்ட் தொடர் வெற்றியை இந்திய அணியினரும் ரசிகர்களும் தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், ட்விட்டரில் கூறியதாவது:

பல தடைகளைத் தாண்டி கிடைத்த இந்த வெற்றியை கொண்டாடுங்கள் இந்தியா. எனினும் உண்மையான அணி இன்னும் சில நாள்களில் இந்தியாவுக்கு வரவுள்ளது. அவர்களை நீங்கள் தோற்கடித்தாக வேண்டும். எச்சரிக்கையுடன் இருங்கள். அடுத்த இரு வாரங்களுக்கு அதிகமாகக் கொண்டாடுவதைத் தவிர்த்து விடுங்கள் என்று கூறியுள்ளார். 

கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. சென்னையில் பிப்ரவரி 5 அன்று டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com