பேட் என்பது அடுத்த வீட்டு மனைவி போல: விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கும் தினேஷ் கார்த்திக் வர்ணனை

பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்குத் தங்களுடைய பேட்களைப் பிடிக்காது.
பேட் என்பது அடுத்த வீட்டு மனைவி போல: விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கும் தினேஷ் கார்த்திக் வர்ணனை

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் ஆட்டத்தில் வர்ணனை செய்த தினேஷ் கார்த்திக், மோசமான உதாரணத்தைக் கூறியதற்காக விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. இந்த ஆட்டத்தில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்காக தினேஷ் கார்த்திக் வர்ணனை செய்தார். 

இந்தியாவுக்காக 26 டெஸ்டுகள், 94 ஒருநாள், 32 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்காக வர்ணனையாளராகப் பணியாற்றி பாராட்டுகளைப் பெற்றார். தற்போது இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடரிலும் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார்.

2-வது ஒருநாள் ஆட்டத்தின் வர்ணனையின்போது பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தும் பேட் பற்றி வர்ணனையாளர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது தினேஷ் கார்த்திக் பேசியதாவது:

பேட்கள் மீதான அதிருப்தி பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் இருக்கும். பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்குத் தங்களுடைய பேட்களைப் பிடிக்காது. அவர்களுக்கு அடுத்த பேட்ஸ்மேன்களின் பேட்களைப் பிடிக்கும். பேட் என்பது அடுத்த வீட்டு மனைவி போல. அவர்கள் எப்போதும் நன்றாக இருப்பது போல இருக்கும் என்றார். 

பேட்களைப் பற்றிய உரையாடலின்போது அடுத்த வீட்டு மனைவி பற்றிய கருத்தை நுழைத்து மோசமாகப் பேசியதற்காகச் சமூகவலைத்தளங்களில் பலரும் தினேஷ் கார்த்திக்கை விமர்சித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com