எனக்குக் கிடைக்காத இந்திய அணி வாய்ப்பு: ஜெயதேவ் உனாட்கட் வருத்தம்

பலருக்கு வாய்ப்புகள் கிடைத்ததைப் பார்த்தபோது நானும் அந்த வாய்ப்புகளுக்குத் தகுதியானவனாக எண்ணினேன்.
எனக்குக் கிடைக்காத இந்திய அணி வாய்ப்பு: ஜெயதேவ் உனாட்கட் வருத்தம்

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்குத் தேர்வாகாதது வருத்தமாக உள்ளதாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட்கட் கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக ஜூன் 2 அன்று இந்திய அணி இங்கிலாந்துக்குச் செல்கிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறுகிறது. அதன்பிறகு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கி, செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது. இந்தச் சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்திய அணிக்குத் தேர்வாகாத இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட்கட், ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் நன்றாகப் பந்துவீசி வருவதால் இந்திய அணிக்குத் தேர்வாவேன் என எதிர்பார்த்தேன். குறைவான போட்டிகளால் வாய்ப்புகள் குறைந்துவிட்டன. அதனால் ஒவ்வொரு தொடருக்கும் பலர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பல வாய்ப்புகளைத் தருகிறது. இதன் அடிப்படையில் இந்திய அணிக்குத் தேர்வாகாதது வருத்தமாக உள்ளது. 2020 ஐபிஎல் போட்டி எனக்குச் சரியாக அமையவில்லை. நன்கு விளையாடுபவர்களை இந்திய அணி எதிர்பார்க்கிறது. ரஞ்சிக் கோப்பைப் போட்டியும் நடைபெறவில்லை. ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்துக்கு என்னைத் தேர்வு செய்யாதது சரிதான். அப்போது அணியில் எல்லோரும் நல்ல உடற்தகுதியுடன் இருந்தார்கள். அதன்பிறகு பலருக்கு வாய்ப்புகள் கிடைத்ததைப் பார்த்தபோது நானும் அந்த வாய்ப்புகளுக்குத் தகுதியானவனாக எண்ணினேன். இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கு நான் தேர்வு செய்யப்படுவேன் என நம்பிக்கையுடன் இருந்தேன். இங்கிலாந்துக்குச் செல்லும் இந்திய ஏ அணியிலும் இடம்பெறுவேன் என நினைத்தேன். அந்தத் தொடரும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். 

29 வயது உனாட்கட், இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 7 ஒருநாள், 10 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 89 முதல்தர ஆட்டங்களில் விளையாடி 327 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2019-20 ரஞ்சி கோப்பைப் போட்டியில் இவர் தலைமையிலான செளராஷ்டிரம் அணி கோப்பையை வென்றது. அந்தப் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார் உனாட்கட். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com