தொடர் நாயகன் விருதை மீண்டும் வென்ற அஸ்வின்: சாதனைப் பட்டியலில் 2-வது இடம்!
By DIN | Published On : 06th December 2021 11:13 AM | Last Updated : 06th December 2021 11:13 AM | அ+அ அ- |

மும்பை டெஸ்டில் சிறப்பாகப் பந்துவீசிய தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின், தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டை வென்ற இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடா் நடைபெற்றது. கான்பூா் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கும் நியூஸிலாந்து 62 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இந்திய அணி 70 ஓவா்களில் 276/7 ரன்களுடன் டிக்ளோ் செய்வதாக அறிவித்தது.
மும்பை டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 540 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 45 ஓவா்களில் 140/5 ரன்களை எடுத்துத் தடுமாறியது. ஹென்றி நிக்கோல்ஸ் 36, ரச்சின் ரவீந்திரா 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் நியூசிலாந்து அணி இன்று 56.3 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் மும்பை டெஸ்டை 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது. நியூசிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் அஸ்வின், ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
ஆட்ட நாயகன் விருது மயங்க் அகர்வாலுக்கும் தொடர் நாயகன் விருது அஸ்வினுக்கும் வழங்கப்பட்டது. இது அஸ்வினின் 9-வது தொடர் நாயகன் விருதாகும். இதற்கு முன்பு, மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தொடர் நாயகன் விருதை அஸ்வினே வென்றார்.
தொடர் நாயகன் விருதை அதிகமுறை வென்றவர்களின் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இன்னும் இருமுறை தொடர் நாயகன் விருதுகளை வென்றால் முதல் இடத்தில் உள்ள முத்தையா முரளிதரனின் சாதனையைச் சமன் செய்துவிடுவார்.
டெஸ்ட்: தொடர் நாயகன் விருதுகள்
முரளிதரன் - 11
அஸ்வின் - 9
காலிஸ் - 9
இம்ரான் கான் - 8
வார்னே - 8
ஹேட்லி - 8