ருதுராஜை இந்திய அணிக்கு உடனடியாகத் தேர்வு செய்யவேண்டும்: வெங்சர்கார் சொல்லும் காரணம்
By DIN | Published On : 13th December 2021 11:00 AM | Last Updated : 13th December 2021 11:41 AM | அ+அ அ- |

ருதுராஜ் கெயிக்வாட் இந்திய அணிக்கு உடனடியாகத் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கார் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2021 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த 24 வயது ருதுராஜ் முதலிடம் பிடித்தார். ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் (24) ஆரஞ்ச் தொப்பியைப் பெற்றவர் என்கிற பெருமையையும் அடைந்தார். இந்த வருடம் 16 ஆட்டங்களில் 635 ரன்கள் எடுத்துள்ளார் ருதுராஜ். 4 அரை சதங்கள், 1 சதம். ஸ்டிரைக் ரேட் - 136.26. 23 சிக்ஸர்கள். ஒரு பருவத்தில் 600 ரன்கள் எடுத்த 3-வது சிஎஸ்கே வீரர். இதற்கு முன்பு ஹஸ்ஸி, ராயுடு இந்த இலக்கை எட்டியுள்ளார்கள்.
இந்திய இளம் தொடக்க வீரர்களில் பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கல்லை விடவும் மிகத்திறமையானவர் என்கிற நம்பிக்கையை ஐபிஎல் 2021 போட்டியின் முடிவில் பெற்றார். அதனால் தான் அவ்விருவரும் இந்திய ஏ அணிக்குத் தேர்வாக, நேரடியாக (நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில்) இந்திய அணிக்குத் தேர்வானார் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த ருதுராஜ். இந்திய அணிக்காக இலங்கையில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்
ஐபிஎல் போட்டியை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய ருதுராஜ், சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலும் நன்கு விளையாடினார். தற்போது, விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் அதை விடவும் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்த்துள்ளார். தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். இதுவரை 4 ஆட்டங்களில் 3 சதங்களுடன் 435 ரன்கள் எடுத்துள்ளார்.
இதையடுத்து, ருதுராஜ் கெயிக்வாட் இந்திய அணிக்கு உடனடியாகத் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவருமான திலீப் வெங்சர்கார் கூறியுள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
இந்திய அணிக்கு ருதுராஜ் கெயிக்வாட் உடனடியாகத் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்திய அணியில் இடம்பெற அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அவருக்கு 18, 19 வயது இல்லை. அவர் வயது 24. 28 வயதுக்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் வழங்குவதில் அர்த்தமில்லை. சமீபகாலமாக அற்புதமாக விளையாடி வருகிறார் என்று கூறியுள்ளார்.