இந்தியாவில் கிரிக்கெட் ஒளிபரப்பில் களமிறங்கியுள்ள பிரபல ஓடிடி நிறுவனம்
By DIN | Published On : 21st December 2021 10:59 AM | Last Updated : 21st December 2021 12:13 PM | அ+அ அ- |

பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம் கிரிக்கெட் ஒளிபரப்பில் களமிறங்கியுள்ளது.
கிரிக்கெட் ஆட்டங்களை தனது ஓடிடியில் நேரலையாக ஒளிபரப்பவுள்ளதாகக் கடந்த வருட நவம்பர் மாதம் அறிவித்தது அமேசான் பிரைம். அதன்படி நியூசிலாந்தில் நடைபெறும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆட்டங்களை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமை அமேசான் பிரைம் ஓடிடிக்குக் கிடைத்துள்ளது.
2022 முதல் கிரிக்கெட் ஒளிபரப்பிலும் களமிறங்கும் அமேசான் பிரைம், ஜனவரியில் நடைபெறும் நியூசிலாந்து - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரை முதல்முதலாக ஒளிபரப்பவுள்ளது.
இந்திய அணி விளையாடும் ஆட்டங்களும் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகவுள்ளன. பிப்ரவரி 2022-ல் இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகள் விளையாடும் ஆட்டங்களும் நவம்பர் 2022-ல் இந்தியா - நியூசிலாந்து ஆடவர் அணிகள் விளையாடும் ஆட்டங்களும் அமேசான் பிரைம் ஓடிடியில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளன.
நியூசிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் ஆட்டங்கள் இந்திய நேரப்படி அதிகாலைக்குத் தொடங்கும். இதனால் இந்தியா விளையாடாத டெஸ்ட் ஆட்டங்களை இந்தியாவில் நேரலையாக ஒளிபரப்பப் பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆர்வம் செலுத்தாத நிலையில் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளது அமேசான் பிரைம் ஓடிடி.