ஹர்பஜன் சிங் ஓய்வு அறிவிப்பு
By DIN | Published On : 24th December 2021 03:01 PM | Last Updated : 24th December 2021 03:08 PM | அ+அ அ- |

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகச் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.
41 வயது ஹர்பஜன் சிங், இந்திய அணிக்காக 103 டெஸ்ட், 236 ஒருநாள், 28 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 1998-லிருந்து இந்தியாவுக்காக விளையாட ஆரம்பித்த ஹர்பஜன் சிங், கடைசியாக 2016-ல் விளையாடினார். ஐபிஎல் போட்டியில் 163 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2008 முதல் ஐபிஎல் போட்டியில் விளையாட ஆரம்பித்த ஹர்பஜன், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவர், சமீபத்திய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்தார்.
ஹர்பஜன் சிங் - நடிகை கீதா பஸ்ரா ஆகிய இருவரும் 2015-ல் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். இத்தம்பதியருக்கு 2016-ல் மகளும் இந்த வருட ஜூலை மாதம் ஆண் குழந்தையும் பிறந்தன.
பிக் பாஸ் புகழ் லாஸ்லியா நடிகையாகத் தமிழில் அறிமுகமான பிரண்ட்ஷிப் படத்தின் ஹர்பஜன் சிங் நடித்திருந்தார்.
கடந்த 23 வருடங்களாக என்னுடைய கிரிக்கெட் பயணத்தை அழகாகவும் நல்ல நினைவுகளாகவும் மாற்றிய அனைவருக்கும் நன்றி எனத் தனது ஓய்வு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார் ஹர்பஜன் சிங்.