என்னுடைய கருத்துகள் அஸ்வினைக் காயப்படுத்தியிருந்தால் மகிழ்ச்சி: ரவி சாஸ்திரி

குல்தீப் யாதவ் பற்றிய என்னுடைய கருத்துகள் அஸ்வினைக் காயப்படுத்தி அவரை மேலும் ஊக்கப்படுத்தியிருந்தால்...
என்னுடைய கருத்துகள் அஸ்வினைக் காயப்படுத்தியிருந்தால் மகிழ்ச்சி: ரவி சாஸ்திரி

குல்தீப் யாதவ் பற்றிய என்னுடைய கருத்துகள் அஸ்வினைக் காயப்படுத்தி அவரை மேலும் ஊக்கப்படுத்தியிருந்தால் மகிழ்ச்சியடைவேன் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

2018-ல் சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்தியாவின் குல்தீப் யாதவ் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மழையால் பாதிக்கப்பட்ட அந்த டெஸ்டி டிரா ஆனது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது. இதையடுத்து பேட்டியளித்த அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வெளிநாடுகளில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் முதல் தேர்வாக இருப்பார் என்றார். இதுபற்றி சமீபத்தில் கிரிக்இன்ஃபோ தளத்துக்குப் பேட்டியளித்த அஸ்வின், ரவி சாஸ்திரியின் கருத்துகளால் தான் நொறுங்கிப் போனதாகக் கூறினார். 

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ரவி சாஸ்திரி இதுபற்றி பதில் அளித்ததாவது:

ஒரு பயிற்சியாளராக என்னுடைய வேலை, அனைவருடைய உணவுக்கும் வெண்ணெய் தடவுவது அல்ல. எவ்வித உள்நோக்கமும் இன்றி உண்மையான புள்ளிவிவரங்களைச் சொல்ல வேண்டும். சிட்னி டெஸ்டில் அஸ்வின் விளையாடவில்லை. குல்தீப் விளையாடி 5 விக்கெட்டுகளை எடுத்தார். குல்தீப் பந்துவீசிய விதத்தைப் பார்க்கும்போது வெளிநாடுகளில் அவர் இந்திய அணியின் நெ.1 சுழற்பந்து வீச்சாளராக இருக்கக் கூடும் என்றேன். யாரையாவது அது காயப்படுத்தியிருந்தால் நல்லது. அஸ்வினை அது காயப்படுத்தியிருந்தால், வேதனை தந்திருந்தால் அதனால் அவர் தன் வேலையில் பொறுப்பாக இருந்ததால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எந்தவொரு வீரரும் தன் மனத்தில், என்னுடைய பயிற்சியாளருக்குப் பாடம் கற்பிப்பேன், என் திறமையை நிரூபிப்பேன் என நினைப்பதையே விரும்புவேன். அது அவரை வேதனைப்படுத்தியிருந்தால் எனக்கு மகிழ்ச்சியே. அதனால் அவர் வேறு விதமாக திறமையை நிரூபித்திருந்தால், 2019-ல் அவர் பந்துவீசியதையும் 2021-ல் பந்துவீசியதையும் ஒப்பிடுங்கள், அதனால் எனக்கு மகிழ்ச்சியே. இப்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் உள்ளார். தன்னுடைய உடற்தகுதியில் அவர் நன்கு முன்னேறியுள்ளார் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com