ஆஷஸ்: போட்டி நடுவருக்கு கரோனா பாதிப்பு

இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளைச் செலுத்தியதோடு பூஸ்டர் தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளார்.
ஆஷஸ்: போட்டி நடுவருக்கு கரோனா பாதிப்பு

ஆஷஸ் தொடரில் போட்டி நடுவராகப் பணியாற்றும் முன்னாள் ஆஸி. வீரர் டேவிட் பூன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த நால்வருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் இரு பணியாளர்கள், பணியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் என மொத்தமாக நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

இந்நிலையில் போட்டி நடுவரும் முன்னாள் ஆஸி. வீரருமான டேவிட் பூன், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஜனவரி 5 அன்று தொடங்கும் 4-வது டெஸ்டில் டேவிட் பூன் பணியாற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஸ்டீவ் பெர்னார்ட், போட்டி நடுவராக சிட்னி டெஸ்டில் பணியாற்றவுள்ளார். 

61 வயது டேவிட் பூன், இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளைச் செலுத்தியதோடு பூஸ்டர் தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளார். கரோனா அறிகுறிகள் எதுவுமின்றி அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெல்போர்னில் தங்கி சிகிச்சை பெறும் டேவிட் பூன், 10 நாள்கள் தனிமையில் இருந்த பிறகு ஜனவரி 14 அன்று ஹோபர்டில் தொடங்கும் 5-வது டெஸ்டில் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com